வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (06/07/2011)

கடைசி தொடர்பு:05:45 (06/07/2011)

சக்சேனாவை 2 நாள் போலீஸ் காவல்: கோர்ட் அனுமதி

சென்னை, ஜூலை 6,2011

சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை - சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சேலத்தைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் சக்சேனா.


இந்த வழக்கில் சக்சேனாவிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால், 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில்  சென்னை - சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி, சக்சேனாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சக்சேனா, தாம் போலீஸ் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை என்றும், அவர்கள் மனரீதியாக துன்புறுத்தக் கூடும் என்றும் கூறினார்.

அதேபோல் சக்சேனா தரப்பு வழக்கறிஞர் வக்கீல் தினகரன் வாதிடுகையில், "இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டதாகும். மேலும் சிவில் வழக்காக உள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ள தொகையை கோர்ட்டில் டெபாசிட் செய்து விடுகிறோம்.

மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்கிறோம். படம் நஷ்டம் ஏற்பட்டதால் பணத்தை திருப்பி கேட்கிறார். லாபம் வந்திருந்தால் தந்திருப்பாரா?" என்று வாதிட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிநாத், "சிவில் வழக்கு என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தள்ளுபடி செய்து கொள்ளலாமே? ஜாமீன் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய 2 நாள் கால அவகாசம் தரவேண்டும்.

சட்ட விதிகளின்படி வழக்கில் புலன் விசாரணை செய்ய 15 நாள் வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியும். ஆனால் நாங்கள் 5 நாள் மட்டுமே கேட்கிறோம். அவர்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் விசாரணையை விரைந்து முடித்து விடுகிறோம்," என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மேஜிஸ்திரேட் சவுமியா ஷாலினி அளித்த உத்தரவில், "இந்த வழக்கில் உண்மை தன்மையை கண்டு அறிய சக்சேனாவை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க இந்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.

போலீஸ் காவலில் அழைத்து செல்லும் போது மனரீதியாகவோ அல்லது அடிக்கவோ, அச்சுறுத்தவோ கூடாது," என்று கூறினார்.

சக்சேனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்