'சிங்கம் சிங்கிளாத்தான் வரும்': மதுரை ஆதீனம் கல கல பிரசாரம்!

நாகர்கோவில்: அம்மா பிரதமராவார்ன்னு அவர் ஜாதகம் சொல்லுது என்றும்,  சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றும் மதுரை ஆதீனம் கலகலப்பாக பிரசாரத்தில் பேசினார்.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் தேரடி வீதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜான் தங்கத்திற்கு ஆதரவாக மதுரை ஆதீனம் பிரசாரம் செய்தபோது, ''தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, கோவில்களில்தான் இதுவரை எழுந்தருளியவன், அம்மா பிரதமராகிட இன்று குமரி மக்களிடம் வாக்கு சேகரிக்க உங்கள் முன் எழுந்தருளியுள்ளேன்.

இந்த வரத்தை கொடுத்தது இறைவன். காரணம், அம்மா இந்தியாவின் பிரதமராகி நம்மை எல்லாம் காப்பாத்த போறாங்க. அதுவும் இறைவன் கொடுத்த வரம், அதை நிறைவேற்ற சன்னிதானத்தை துணையிருக்க பிரசார களத்திற்கு செல்லும் அமைப்பையும் அதே இறைவன் அளித்திருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, பயங்கரவாதத்தை ஒழித்திட, மக்கள் அமைதியாக வாழ்ந்திட அம்மாவின் அமைதி, வளம், வளர்ச்சி என்ற நோக்கம் நிறைவேறிட நீங்க செய்ய வேண்டியது இரட்டை இலைக்கு ஓட்டுபோடணும். உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன், இந்திய நாட்டை வல்லரசாக்க இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டு அம்மாவ பிரதமராக்கிடுங்க. அப்படி செய்தால் உங்களுக்கு அம்மா எல்லாவற்றையும் செய்து கொடுப்பார். முதல்வராக இருக்கும்போதே கிரைண்டர், மிக்சி, ஃபேன், லேப்டாப் தருகிறார். இலங்கை பிரச்னையில் ராஜபக்சேவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்.

மூன்று தடவை எம்.ஜி.ஆர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை ரயிலுக்கு டிரைவரா இருந்தாரு. அப்புறம் அம்மா இப்போது மூன்றாவது முறையாக செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு டிரைவரா இருக்காங்க. அடுத்து இப்ப அம்மா சென்னை டூ டெல்லி செங்கோட்டை ரயிலுக்கு டிரைவரா போக தயாராகிட்டாங்க. அவங்க கிளம்பனும்ன்னா, நீங்கதான் பச்சைக்கொடி காட்டணும்.

அம்மா பன்மொழி ஆற்றல் மிக்கவர், 66 வயதிலும் சிங்கமாக நடக்கிறார். மத்த கட்சிக்காரங்க கேட்குறாங்க, 40 தொகுதியில அம்மா தனியா நிக்குறாங்கன்னு. அவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லுறேன், சிங்கம் சிங்கிளாத்தான் வரும். அம்மா பிரதமராவார்ன்னு, அவர் ஜாதகம் சொல்லுது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசிக்கு பிரதமராகனுங்கிறது அவர் ஜாதகத்தில் எழுதப்பட்டுள்ளது. அதை யாம் அறிவோம். அதனால்தான் நாடும், நாட்டு மக்களும் நலம் பெற்றிட வேண்டும் என்ற சமூக நோக்கத்துடன் ஆதீனமும் பிரசாரத்தில் இறங்கிவிட்டது.

விலைவாசி குறைய, தேசிய நதிகளை இணைத்திட, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்திட, மத நல்லிணக்கணம் வளர அம்மா பிரதமராகிடனும். அதற்காக, ஜான்தங்கத்திற்கு நீங்க ஓட்டு போடுங்க" என்று கல கலப்பாக பேசினார்.

ச.காளிராஜ்

படங்கள்:
ரா.ராம்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!