தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை தற்போது இல்லை: ஜெயலலிதா

நெல்லை:  தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை என்ற நிலைமை தற்போது இல்லை  என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ''தி.மு.க. ஆட்சியை விட வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை அ.தி.மு.க. ஆட்சியில் உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்பில் நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் 17 சதவீதம் இடத்தில்தான் உள்ளன.

ஆனால், தமிழ் நாட்டில் தொழில் வளர்ச்சி அடையவில்லை என தி.மு.க.வினர் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 2ஜி மூலம் 2 லட்சம் கோடி அளவுக்கான ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க. அதேபோல், சாமானிய மக்களுக்கு அனைத்து வகையிலும் எதிராக செயல்பட்டு வந்தது காங்கிரஸ் அரசு. எனவே, அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும். இதற்காக அனைத்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்'' என்றார்.

மினரல் வாட்டர்

மேலும் அவர் பேசுகையில், ''தனியார்கள் ரூ.25க்கு மினரல் வாட்டர் விற்பனை செய்து வருகின்றனர். அதே மினரல் வாட்டரை ரூ.10க்கு அரசு வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? அரசு குறைந்த விலையில் மினரல் வாட்டர் வழங்குவதால் தி.மு.க.வினரின் மினரல் வாட்டர் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். நமது நாட்டிலேயே குறைந்த விலைக்கு மினரல் வாட்டர் வழங்குவது தமிழக அரசு மட்டும் தான்.

மின்சாரம்

கடந்த தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சியில் 4,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை என்ற நிலைமை தற்போது இல்லை. மின்உற்பத்தி நிலையங்களில் ஏற்படுகின்ற பழுது காரணமாகத்தான் தற்போது சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்சார உற்பத்திக்காக புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றாததால் தற்போது மின் பற்றாக்குறை நிலவியது. தற்போது செயற்கையான மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்த சதி செய்கின்றனர்'' என்றார்.

படங்கள்: எல்.ராஜேந்திரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!