ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு! (படங்கள்) | Thiruvannamalai borewell, child body retrive

வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (16/04/2014)

கடைசி தொடர்பு:18:28 (16/04/2014)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு! (படங்கள்)

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை ரோபோ இயந்திரம் மூலம் மீட்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், .24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அக்குழந்தை சடலமாக இன்று மாலை மீட்கப்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் நேற்று மாலை 4 மணியளவில் துரை - ஜெயலட்சுமி தம்பதியரின் ஒன்றரை வயது சுஜித் என்ற ஆண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

160 அடி ஆழம்

ஜெயபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 160 ஆழத்தில் ஆழ்துளை கிணறு உள்ளது. அதில் தவறி விழுந்த குழந்தை சுஜித் 45 அடி ஆழத்தில் சிக்கினான்.

மீட்பு பணி தீவிரம்


குழந்தை விழுந்த தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். உடனே, இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, குழந்தை விழுந்துள்ள இடத்தின் அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டுவதற்காக 3 பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அந்த 3 பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 8 மணி அளவில் 20 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது.

ஆக்சிஜன்

இதனிடையே ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை மயக்கமடைந்துவிடாமல் இருப்பதற்காக குழிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

மதுரையில் இருந்து  மீட்புக் குழு

இதுபோன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற மதுரை மற்றும் கோவையை சேர்ந்த ரோபோட்டிக் எந்திர மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ரோபோ முயற்சி தோல்வி

பெரும் முயற்சிக்கு பின் ரோபோ இயந்திரத்தின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இயந்திரத்தின் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சி பலன் தராததால் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

சடலமாக மீட்பு

இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் இன்று மாலை 5.45 மணி அளவில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. அதனை பார்த்த அக்குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

உரிமையாளர் கைது

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் ஜெயபாலை கைது செய்துள்ளனர்.

10 தினங்களுக்கு மூன்றாவது சம்பவம்

கடந்த ஞாயிறன்றுதான் நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் அருகே 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

அதற்கு சில தினங்களுக்கு முன்னர், அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதியன்று விழுப்புரம் அருகே பல்லகசேரி கிராமத்தில் மதுமிதா என்ற மூன்று வயது சிறுமி தவறி விழுந்து, பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு மறுதினம் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தாள்.

10 தினங்களுக்குள் தமிழகத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைவிட அடுத்தடுத்து இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த பின்னரும், ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள், அதனை உரிய முறையில் மூடாமல் அலட்சியமாக விட்டுச் செல்வதும், அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததும் தொடர்கதையாகவே உள்ளது.

படங்கள்: கா. முரளி
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்