Published:Updated:

ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று! - ஹாட்ஸ்பாட் ஆகிறதா கோயம்பேடு சந்தை?

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிய 27 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-க்குப் பிறகு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாதிப்புகளின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 733 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,000-த்தைக் கடந்திருக்கிறது. இதில், 1,000-க்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால், சென்னையில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியும் முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 6 மண்டலங்களிலேயே அதிக அளவிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

`ரெட் ஸோனில் தமிழகத்தின் 12 மாவட்டங்கள்; ஆரஞ்சு ஸோனில் 24!’ -ஒரே ஒரு மாவட்டத்துக்கு மட்டுமே தளர்வு?

கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையர்வர்களிடம் நோய்த் தொற்று தொடர்ச்சியாகக் கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் கோயம்பேடு சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேலைபார்த்த 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில், இன்று ஒரே நாளில் கோயம்பேடு சந்தையில் இருந்து ஊர் திரும்பிய தொழிலாளர்கள் 27 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸார் சோதனை
கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸார் சோதனை

கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்குத் திரும்பிய 19 பேருக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் வசதிகள் போதிய அளவில் இல்லாததால், திருச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

`ரெட்ஜோனில் சென்னை உட்பட 129 மாவட்டங்கள்!’- மே 3-க்குப் பிறகு மத்திய அரசின் ஆக்‌ஷன் பிளான் #Lockdown

அதேபோல், கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கோயம்பேடு சந்தை தொடர்புடைய 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு