ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

மதுரை: ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மதுரையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''நாளை திருச்சியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளேன். 40 தொகுதியிலும் பிரசாரத்தை முடித்துள்ளேன். தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆதரவு அலை வீசுகிறது. எனவே 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இதற்கு காரணம், ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். தமிழக மக்கள் இதை உணர்ந்துள்ளார்கள். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை கூட கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ள வில்லை.

மதுரையில் நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது பல மடங்கு எழுச்சியை பார்த்தேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரசாரத்தின்போது எனது வேனில் கல் வீசியதாக கூறுகிறார்கள். ஆனால் யாரும் கல் வீசவில்லை. ஆனால் பிரசாரத்தின்போது, திரண்டிருந்த பொதுமக்கள் என்னை பேச வலியுறுத்தி அன்பின் காரணமாக கொடி கம்புகளால் மறித்தனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!