Election bannerElection banner
Published:Updated:

விழுப்புரம்: கடித்துக் குதறிய நாய்கள்... 28 ஆடுகள் உயிரிழந்த சோகம்... என்ன நடந்தது?

இறந்துபோன செம்மறி ஆடுகள்
இறந்துபோன செம்மறி ஆடுகள்

நாய்கள் கடித்துக் குதறியாதல் 28 செம்மறி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், எண்ணாயிரம் அடுத்துள்ளது திருநந்திபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்வம், குமுதா தம்பதியினர். இவர்கள் சுமார் 6 வருட காலமாக ஆடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று (27.02.2021) அதிகாலையில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை மூன்று நாய்கள் சேர்ந்து கடித்துக் குதறி கொண்டிருந்துள்ளன. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமுதா(38) பட்டியின் அருகே சென்று நாய்களை விரட்டி விட்டு பார்த்தபோது மேலும் அதிர்ந்து போயுள்ளார். 28 ஆடுகள் உயிரிழந்தும், மூன்று ஆடுகள் உயிருக்கு போராடியபடியும் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சோகம் தாளாமல் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த ஆடுகளை கண்டு கலங்கும் குமுதா.
இறந்த ஆடுகளை கண்டு கலங்கும் குமுதா.

இதுகுறித்து குமுதாவிடம் பேசினோம்.

"நாங்கள் திருநந்திபுரம் கிராமத்தில் ஒரு கூரை வீட்டில் வசித்து வருகிறோம். என் கணவர் பெயர் செல்வம். அருகிலுள்ள ஒரு கோயிலில் சுற்றுக் கோயில் பூசாரியாக இருக்கிறார். நாங்க ஆறு வருஷமா ஆடு வளர்த்துகிட்டு வர்றோம். எங்களுக்கு ஆடு மேய்ப்பதைத் தவிர, வேற வேல தெரியாது. ஆடுகள மேச்சாதான் எங்க வயித்துக்கு ஜீவன். எனக்கு, மூணும் பசங்கதான். மூன்று பேருமே எண்ணாயிரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறாங்க. கோயிலில் பூஜை வேலை முடிந்ததும் என்னுடன் ௭ன் கணவரும் சேர்ந்து ஆடுகளைப் பார்த்துப்பாரு. எங்களுக்கு விளைநிலங்கள் அப்படின்னு ஏதுமில்ல. வீடுகூட கூரை வீடுதான். ஆட்டுப்பட்டிகூட எங்க சொந்த நிலத்தில் இல்ல. புறம்போக்கு நிலத்தில் தான் தற்காலிகமாக அமைத்து வைத்திருக்கோம்.

கடந்த சனிக்கிழமை அன்று கோயில்ல விசேஷம் இருந்ததுனால, அதிகாலையில ஆட்டுப்பட்டிய மூடிட்டு சுமார் 4 மணி போல வீட்டுக்கு வந்துட்டோம். திரும்பிப் போய் பார்த்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்துச்சு. மூன்று நாய்கள் சேர்ந்து நான் வளத்த செம்மறி ஆடுகளைக் கடித்துக் குதறிக்கிட்டிருந்ததுங்க. நாய்களைத் துரத்திவிட்டு போய் பார்த்தபோது 28 செம்மறி ஆடுகள் இறந்து போய் கிடந்தது. மூன்று செம்மறி ஆடுகள் உயிருக்குப் போராடியபடி கிடந்தது. எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. எண்ணாயிரம் கால்நடை மருத்துவர் வந்து உயிருக்குப் போராடிய மூன்று ஆடுகளுக்கும் வைத்தியம் பார்த்தாரு. அப்போ, மணியக்கார் வந்து நேர்ல பார்த்துட்டு எண்ணாயிரம் கால்நடை மருத்துவருக்கு ஆடுகளை பிரோத பரிசோதனை பண்ணும்படி ஒரு பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்தாங்க.

இறந்த ஆடுகளுடன் குமுதா
இறந்த ஆடுகளுடன் குமுதா

கால்நடை மருத்துவரும் இறந்துபோன அனைத்து ஆடுகளையும் பார்த்தாரு. அதுக்கு அப்புறமா நாங்க அமைத்திருக்கிற ஆட்டுப் பட்டிக்கு அருகிலேயே ஜேசிபி இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி இறந்துபோன எல்லா ஆடுகளையும் புதைத்துவிட்டோம். குழந்தைகளைப் போல வளர்த்தேன். கடைசியில இப்படி ஆகிடுச்சு. இன்றும் எண்ணாயிரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குதான் மருத்துவரைப் பார்க்க வந்திருக்கிறோம். உரிய நிவாரணம் கிடைக்கணும்னு கேட்டுக்கிறோம்" என்றார் சோகம் தாளாத குரலில்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு