Published:Updated:

`அலட்சியமாகச் சுற்றிய 2,879 பேர்!’ - அதிரடிகாட்டும் வேலூர் காவல்துறை #corona

வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார்
வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார்

வேலூர் மாவட்டத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 2,879 பேர் கைதுசெய்யப்பட்டு உடனே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் ஊரடங்கை மதிக்காமலும் அலட்சியமாக வெளியில் நடமாடுகிறார்கள். மூன்று நாள்களுக்குத் தேவையான காய்கறிகளையும் 10 நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கலெக்டர் சண்முகசுந்தரம் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறார்.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்

கலெக்டரின் அறிவுறுத்தலை ஏற்காமல் தினமும் காய்கறி, மளிகைப் பொருள்கள், மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காகக் கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். தேவையின்றி இரண்டு சக்கர வாகனங்களில் சிலர் சுற்றுகிறார்கள். கடைகளில் எவ்வளவு எச்சரிக்கை செய்தும் அதை அலட்சியம் செய்துவிட்டு கும்பல் கும்பலாக நின்று பொருள்களை வாங்குகிறார்கள்.

இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதைத்தடுக்கும் வகையில், எஸ்.பி பிரவேஷ்குமாரின் உத்தரவுக்கு இணங்கத் தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேலூர் எஸ்.பி அலுவலகம்
வேலூர் எஸ்.பி அலுவலகம்

அதன்படி 144 தடையை மீறியதாக இதுவரை மாவட்டம் முழுவதும் 2,879 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பைக், கார் உட்பட 2,292 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் அன்றே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே சமயம், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கும் மறு உத்தரவு வரும்வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் கொடுக்கப்பட மாட்டாது என்றும் எஸ்.பி அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு