நில அபகரிப்பு: வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு! | Land Grabbing: The case against 11 people, including Vagai Chandrasekhar!

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (21/06/2014)

கடைசி தொடர்பு:14:58 (21/06/2014)

நில அபகரிப்பு: வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு!

திண்டுக்கல்: நில அபகரிப்பு வழக்கில் நடிகரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான வாகை சந்திரசேகர், அவரது மனைவி உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வரும் சிவசங்கரன் என்பவரின் மனைவி கவுசல்யா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ''திண்டுக்கல் மாவட்டம், நலக்கோட்டை தாலுகா மாலைகவுண்டன்பட்டியில் எனது தந்தை குமரவேலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 15 சென்ட் நிலம் இருந்தது. இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் 18 செயின்ட் நிலத்தை ஆர்ஜிதம் செய்தனர். இதுபோக மீதமிருந்த 2 ஏக்கர் 97 சென்ட் நிலத்தை கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி எனக்கும், எனது சகோதரிகளான வித்யா, ரம்யா ஆகியோருக்கு எனது தந்தை செட்டில்மெண்ட் எழுதி கொடுத்தார். இதற்கு பட்டாவும் உள்ளது.

இதில் 38 சென்ட் நிலத்தை கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி கவுண்டர் மனைவி சுப்பம்மாள், மாலையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி மனைவி பாப்பம்மாள், அவரது மகன் சரவணன் ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து கடந்த 11.3.2010ஆம் தேதி நிலக் கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் பேரில் எழுதிக்கொண்டனர். இந்த இடத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பகுதியை சேர்ந்த ராஜம்பாடி மகன் பகீரதன், இவரது மனைவி சங்கீதா மேனன், பரசுஅரசன், பள்ளப்பட்டி சின்னச்சாமி, அம்மையநாயக்கனூர் துரைராஜ், நடிகரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான வாகை சந்திரசேகர், இவரது மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்த கந்தப்பகோடையை சேர்ந்த முருகபாண்டி என்பவரது துணையுடன் நடிகர் சந்திரசேகரின் மனைவியான ஜெகதீஸ்வரியின் தங்கை மகன் பகீரதன் பெயரில் எழுதிக்கொண்டனர்.

இது குறித்த விவரம் தெரிந்ததும் எனது தந்தை மிகவும் அதிர்ச்சி அடைந்தார். நியாயம் கேட்க சென்றபோது 1997ஆம் ஆண்டு அரசு நிலத்தை கைப்பற்றியவர்களுக்கே அது கிடைக்கவில்லை. நீ இது குறித்து புகார் செய்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார். எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவினருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் பேரில் நடிகர் சந்திரசேகர், அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சுப்பம்மாள், பாப்பம்மாள், பத்திர எழுத்தர் முருகபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்