அழகிரி மீது மதுரை கலெக்டரிடம் நில அபகரிப்பு புகார்!

மதுரை: தயா பொறியியல் கல்லூரிக்காக கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி மீது மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையை சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் ராமலிங்கம் என்பவர் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் அளித்த புகார் மனுவில், "மு.க.அழகிரி, சிவரக்கோட்டையில் கல்வி அறக்கட்டளை மூலம் தயா பொறியியல் கல்லூரி கட்டி உள்ளார். 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கல்லூரிக்கு பல்வேறு முறைகேடுகள் மூலம் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மு.க.அழகிரி கிரைய பத்திரம் போட்டு உள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். அரசு நிலத்தை ஆக்கிரமித்தது சட்டப்படி குற்றமாகும்.

எனவே மு.க.அழகிரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சுப்பிரமணியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!