ரமலான் நோன்பு தொடங்கியது: மசூதிகளில் சிறப்பு தொழுகை!

சென்னை: முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியுள்ளது. இதனால் மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.

இஸ்லாமியர்களின் முக்கியமான கடமைகள் ஐந்து. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்று கலிமா சொல்வது, இறைவனுக்காக ஐவேளை தொழுகை செய்வது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது,  தன்னுடைய சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை ஏழை எளியவர்களுக்கு ஜகாத் (தானம்) கொடுப்பது,  ஹஜ் பயணம் மேற்கொள்வது ஆகும்.

புனிதமிக்க ரமலான் மாதத்தின் பிறை தெரிந்த அறிவிப்பைத் தொடர்ந்து முஸ்லிம்கள் இன்று முதல் நோன்பிருக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதிகாலையில் எழுந்து சஹர் உணவை உண்டு தங்களின் நோன்பை மேற்கொள்பவர்கள் அதன்பின் உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறைவனை தொழுபவர்களாக மாலையில் சூரியன் மறைந்த பின்னர் நோன்பு திறக்கிறார்கள்.

இந்த நோன்பு திறத்தல் இஃப்தார் எனப்படும். இவ்வாறு 30 நாட்கள் இந்த நோன்பு மேற்கொள்ள இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ரமலான் பண்டிகை கொண்டாடுகிறார்கள்.

இந்த ரமலான் மாதம் குறித்து இறைவன் தன்னுடைய திருக்குர் ஆனில் கூறியிருப்பதாவது:

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)............... (அல் குர்ஆன் 2:185)

மு.செய்யது முகமது ஆசாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!