Published:Updated:

``144 தடை உத்தரவு; ஆபத்தான குளியல்" - திருவள்ளூரில் 3 சிறுமிகள் உயிரிழந்த பரிதாபம்

ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுமி சந்தியா
ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுமி சந்தியா

திருவள்ளூரில் ஏரியில் குளித்த 5 சிறுமிகளில் ஒருவர், ஆழமான பகுதிக்குச் சென்றார். அவரைக் காப்பாற்ற சென்ற சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கினர். இதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசின் அறிவிப்பை அலட்சியப்படுத்தி பலர் வீட்டை விட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் திருவள்ளூரில் ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிறுமி  பிரியதர்ஷினி
சிறுமி பிரியதர்ஷினி

திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. இவரின் மனைவி குமாரி (37). இவர்களின் மகள் ஐஸ்வர்யா (16). ரமேஷின் வீட்டுக்கு அவரின் உறவினரான தாம்பரத்தைச் சேர்ந்த முருகனின் மகள் பிரியதர்ஷினி (15) வந்தார். ரமேஷின் பக்கத்து வீட்டுகளில் குடியிருப்பவர்கள் சங்கீதா, சந்தியா(17), சௌமியா (14). கூடப்பாக்கத்தை அடுத்த நேமம் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க குமாரி, ஐஸ்வர்யா, பிரியதர்ஷினி, சந்தியா, சௌமியா, சங்கீதா ஆகிய 6 பேரும் சென்றனர்.

ஏரியில் குளித்துக்கொண்டிருந்த போது பிரியதர்ஷினி, சந்தியா, சௌமியா, ஐஸ்வர்யா, சங்கீதா ஆகிய 5 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்றனர். அப்போது, அவர்கள் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர். அதைப்பார்த்த குமாரி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். பின்னர் அவரும் 4 பேரைக் காப்பாற்ற முயன்றார். அதனால் குமாரியும் தண்ணீருக்குள் மூழ்கினார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் உள்ளவர்கள் ஏரியில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அதில் ஐஸ்வர்யா, குமாரி, சங்கீதா ஆகியோர் 3 பேர் மீட்கப்பட்டனர். மற்ற 3 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கினர்.

சிறுமி சௌமியா
சிறுமி சௌமியா

குமாரி, ஐஸ்வர்யா, சங்கீதா ஆகியோரை நேமம் அரசு சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 3 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் சங்கீதாவை மட்டும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளவேடு போலீஸார் வழக்குபதிந்து விசாரித்துவருகின்றனர். தற்போது சிகிச்சையில் உள்ள குமாரி, ஐஸ்வர்யா ஆகியோரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஏரியில் குளிக்கச் சென்ற சிறுமிகள் 144 தடை உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருந்துள்ளனர். வீட்டிலேயே இருந்ததால் குமாரி மற்றும் 5 சிறுமிகள் சேர்ந்து நேமம் ஏரிக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். குமாரி, ஏரியின் கரையிலிருந்து துணிகளை துவைத்துக்கொண்டிருந்துள்ளார். மற்ற 5 சிறுமிகளும் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாது.

மரணம்
மரணம்
மாதிரி படம்

இந்தச் சமயத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற சிறுமிகள் திடீரென தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கினர். அவர்களைக் குமாரி காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியதும், குமாரி உதவிக்கு மற்றவர்களை அழைத்துள்ளார். அவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் குமாரியும் தண்ணீரில் மூழ்கினார். அப்போது ஏரியில் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் முதலில் உதவி செய்து குமாரி, சங்கீதா, ஐஸ்வர்யா ஆகியோரை மீட்டுள்ளனர். ஆனால் மற்ற 3 சிறுமிகள் தண்ணீரில் நீண்ட நேரமாக மூழ்கியதால் அவர்கள் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் 3 பேரின் சடலங்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றனர்.

ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் ஒரே நேரத்தில் மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு