Published:Updated:

`ஒற்றைக் கம்பு; இரட்டைக் கம்பு; மான்கொம்பு!’ -இடைவிடாமல் சிலம்பத்தைச் சுழற்றிய 3 வயதுச் சிறுமி

5 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றுவதில் சாதனை படைத்து, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம்பிடித்துள்ளார், வேலூரைச் சேர்ந்த 3 வயதுச் சிறுமி.

திவீஷா
திவீஷா

வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்வர ராவ். சிலம்ப மாஸ்டர். இவரின் மனைவி தீபலட்சுமி. இவர்களின் 3 வயது மகள் திவீஷா அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்துவருகிறார்.

சிலம்பம் சுற்றும் திவீஷா
சிலம்பம் சுற்றும் திவீஷா

இந்தச் சிறுமிக்கு இரண்டு வயதிலிருந்தே அவரின் தந்தை சிலம்பம் கற்றுக்கொடுத்துள்ளார். சிறுமியும் ஆர்வமுடன் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு சுற்றப் பழகிக்கொண்டார். பெரியவர்களுக்கு நிகராக திவீஷாவும் சிலம்பம் சுற்றுகிறார்.

அவரின் திறமையைக் கண்டு பலரும் வியந்துபோயினர். 5 நிமிடத்துக்கு இடைவிடாமல் திவீஷா ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, மான்கொம்பு சுற்றுவதை வீடியோ எடுத்து, `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்புக்குப் பெற்றோர் அனுப்பிவைத்தனர்.

சிலம்பம் சுற்றும் திவீஷா
சிலம்பம் சுற்றும் திவீஷா

அந்த அமைப்பினர், சிறுமியின் திறமையைப் பாராட்டி தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கினர். மேலும், சாதனையாளராக திவீஷாவை அங்கீகரித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தமைக்கான அடையாள அட்டையையும் வழங்கிக் கௌரவித்தனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சிறுமியின் தந்தை விக்னேஷ்வர ராவ், `சத்துவாச்சாரியில் 1938-ம் ஆண்டு சிலம்பப் பயிற்சி பள்ளியை என்னுடைய மூதாதையர்கள் தொடங்கினர். நான், ஐந்தாவது தலைமுறையாக சிலம்பம் கற்றுத்தருகிறேன்.

பெற்றோருடன் திவீஷா
பெற்றோருடன் திவீஷா

இது, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு. 3 வயதுக் குழந்தைகள் முதல் 70 வயதுடைய பெரியர்கள் வரை பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இதைப் பார்த்த என் மகள் திவீஷாவும் ஆர்வமுடன் சிலம்பம் கற்றுக்கொண்டாள்’ என்றார் பெருமிதமாக.