வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (14/07/2014)

கடைசி தொடர்பு:12:30 (14/07/2014)

பத்திரிகைகளில் வரும் செய்தியை பார்க்காமலே ஜெயலலிதா குற்றஞ்சாட்டுகிறார்: கருணாநிதி

சென்னை: பத்திரிகைகளில் வரும் செய்திகளை பார்க்காமலே என் மீது ஜெயலலிதா குற்றஞ்சாட்டுகிறார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், முல்லைப்பெரியாறு குறித்த கண்காணிப்புக் குழுவின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று கேரள அரசு கேட்காத நிலையில், அதை நீங்கள் குறிப்பிட்டு தூண்டி விடுவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?

பத்திரிகையில் வந்ததைதான் நான் எனது அறிக்கையிலே எடுத்துக்காட்டியிருக்கிறேனே தவிர, அதுவும் தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதற்காக எடுத்துச்சொன்னேனே தவிர, கேரள அரசை நான் தூண்டி விடவில்லை. பத்திரிகைகளில் என்ன செய்தி வருகிறது என்பதைப்படித்து பார்க்காமலே முதலமைச்சர் என்மீது குற்றம் சாட்டுகிறார். எப்போதும் அவர் இப்படித்தான்; 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் ஓர் அறிக்கை விடுத்தார். அதில் 29.11.2006 அன்று மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டெல்லியில் முல்லைப்பெரியாறு பிரச்னைக்காக கூட்டிய கூட்டத்தில் கேரள முதல்வர் கலந்து கொண்டார் என்றும், தமிழக முதலமைச்சராக இருந்த நான் கலந்து கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

உடனே அந்தக் கூட்டத்தில் நானும் அமைச்சர்களாக இருந்த ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்ட புகைப்படத்தோடு கூடிய செய்தியை வெளியிட்ட பிறகு, வாயை மூடிக்கொண்டார். இவ்வாறு உண்மை என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுவதிலும் அவர் தான் முதலமைச்சர்.

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் மற்றும் இரண்டு உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களும் வேட்டி கட்டிக்கொண்டு சென்ற காரணத்தால், தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்களே?

தமிழர்களின் கலாசாரத்தின் அடையாளம் வேட்டி. அதை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிப்பது கண்டிக்கத்தக்கதாகும். பொதுவாக தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்குவருபவர்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வர வேண்டுமென்று கட்டுப்பாடு இருந்தால், அவற்றை நீக்குவதற்கு அரசே முன்வந்து அறிவுரை வழங்குவதுதான், இதுபோன்ற நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.

மெட்ரோ ரயில் திருவொற்றியூர் வரை நீடிப்பதற்கான மத்திய அரசின் அனுமதி விரைவில் கிடைக்குமென்று செய்தி வந்திருக்கிறதே?

மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரையில் ஒரு பாதையும், பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்டிரல் வரை மற்றொரு பாதையும் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் பாதையை நீடிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்த நேரத்தில், அதனையேற்று, 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தி.மு.க. அரசு அதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. 9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தத்திட்டத்திற்கு 3,000 கோடி ரூபாய் செலவாகும். தற்போது இந்தத்திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசு அனுமதி வழங்குமென்று தகவல்கள் வந்துள்ளன. அது எந்த அளவுக்கு உண்மை என்பது ஒரு சில வாரங்களில் தெரியும்.

தமிழகத்திற்கான மத்திய அரசியிடம் மண்ணெண்ணை ஒதுக்கீட்டை உயர்த்திட வேண்டுமென்று முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?

தி.மு.க. ஆட்சிக்காலத்தில், 2010 ஆம் ஆண்டு மார்ச் வரை, 59 ஆயிரத்து 780 கிலோ லிட்டர் மண்ணெண்ணையை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி வந்தது. அப்போது ஒரு சில மாதங்களில் மண்ணெண்ணையின் அளவைக்குறைத்தபோது, உடனடியாக நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, அந்தத்துறையின் அமைச்சரை நேரில் டெல்லிக்கே அனுப்பி துறை அமைச்சரையும், துறை செயலாளர்களையும் நேரில் பார்த்து முறையிட்டு, அந்த அளவைக்குறைக்காமல் பார்த்துக்கொண்டோம். தி.மு.க. ஆட்சியில் இந்த அளவுக்கு மண்ணெண்ணை வழங்கப்பட்டதுதான் படிப்படியாகக் குறைந்து, தற்போது 29 ஆயிரத்து 56 கிலோ லிட்டர் அளவாக உள்ளதாம். மத்திய அரசு, தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்குத்தேவையான மண்ணெண்ணையை வழங்கிட முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்