மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அனுமதியில்லை: தமிழக அரசு உறுதி!

சென்னை: மரபணு மாற்றுப் பயிர் சோதனைக்கு அனுமதியில்லை என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சேகர் (கும்மிடிப்பூண்டி) பேசினார். அப்போது, மரபணு மாற்றுப் பயிர்களின் கள ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும் என்றார்.

இதற்கு வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பதில் அளிக்கும்போது, ''மரபணு மாற்றுப் பயிர்களை வயல்களில் கள ஆய்வு செய்வதற்கான அனுமதியை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தின் சார்பில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கூடி, மரபணு மாற்றுப் பயிர்களை கள ஆய்வு செய்வதற்கான அனுமதியை அளிக்கும். கடந்த ஆண்டிலும், இப்போதும் 4 முறைக்கு மேல் இந்தக் குழு கூடி நிலுவையிலுள்ள மனுக்களுக்கு பல்வேறு அனுமதிகளை அளித்துள்ளது.

அதேசமயம், மரபணு மாற்றுப் பயிர்களுக்கான விதைகளை களப் பரிசோதனை செய்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசின் தடையின்மைச் சான்றினைப் பெறுவது அவசியமாகும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகள் தொடர்பாக, கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என உறுதிபடத் தெரிவித்தார். அதே நிலையைத்தான் இப்போதும் கடைப்பிடிக்கிறோம். வயல்களில் மரபணு மாற்று விதைகளின் பரிசோதனைகள் செய்ய அனுமதிக்கப்படாது. இந்த விஷயத்தில் விவசாயிகள் கவலைகொள்ளத் தேவையில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!