காவிரியில் தண்ணீர் இல்லாமல் களைகட்டியது ஆடிப்பெருக்கு விழா! | built weed Aadi Perukku function without water in the Cauvery!

வெளியிடப்பட்ட நேரம்: 14:21 (03/08/2014)

கடைசி தொடர்பு:14:21 (03/08/2014)

காவிரியில் தண்ணீர் இல்லாமல் களைகட்டியது ஆடிப்பெருக்கு விழா!

திருவையாறு: காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும், போர்வெல் நீரின் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் ஆடிப்பெருக்கை கோலாகலமாக கொண்டாடினர்.

திருவையாறு காவிரி ஆற்றில் இன்று (3ஆம் தேதி) கண்டிப்பாக தண்ணீர் வந்து விடும் என மிகுந்த ஆர்வத்தோடு மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். இந்த எதிர்பார்ப்பு இன்று காலை வரையிலும்கூட நீடித்தது. ஆனால் மதியம் வரையிலும் இங்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், ஆடிப்பெருக்கை கொண்டாட கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். இருந்தபோதிலும் இங்கு ஆடி அமாவாசைக்காக போடப்பட்டிருந்த போர்வெல் தண்ணீரில் கோலாகலமாக ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.

புதுமணத் தம்பதிகள் தங்கள்து மாலைகளை ஆற்றில் விட்டுவிட்டு, மஞ்சள் கயிறு அணிந்து கொண்டார்கள். சுமங்கலி பெண்கள் பூஜைகள் செய்து, புதிய தாலி கயிறு அணிந்து கொண்டு, பழைய கயிற்றை ஆற்று மணலில் வீசினார்கள். ஆடிபெருக்கின்போது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால், ஆற்றின் கரைகளில் மக்கள் பூஜைகள் செய்வார்கள். இன்று தண்ணீர் இல்லாமல், காவிரி ஆறு வெறும் கட்டாந்தரையாக இருந்ததால் ஆற்றின் நடுப்பகுதி வரையிலும் மக்கள் நடந்து வந்து, மணல் பகுதியிலும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிபார்கள்.

மேட்டூரில் அணையில் இருந்து பத்து நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் இன்று திருவையாறு உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர்ந்து, ஆடிப்பெருக்கு விழா முழுமை அடைந்திருக்கும். மக்களும் மன நிறைவு அடைந்திருப்பார்கள். ஆனால் எந்தவித முன் கணிப்பும், திட்டமிடலும் இல்லாமல், ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் தண்ணீர் திறக்கப்பட்டது.

மணல் மாஃபியாக்களினால், காவிரி ஆற்றில் பல இடங்களில் பள்ளத்தாக்குகள் உருவானதால், அவைகளை கடந்து தண்ணீர் வந்து சேர தாமதமாகிக் கொண்டிருக்கிறது. தற்போது காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு 6800 கனஅடி. 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டிருந்தால், தற்போது தண்ணீர் வந்து சேர்ந்திருக்கும்.

காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தண்ணீர் வராததால், காவிரித்தாய் ஆதங்கம் அடைந்திருந்தாலும், தன்னை காண வந்த மக்கள் கூட்டத்தை கண்டு கண்டிப்பாக மனம் நெகிழ்ந்திருப்பாள் காவிரித்தாய்.

செய்தி, படங்கள்: கு. ராமகிருஷ்ணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்