கர்நாடகா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்! | In Karnataka, rescue the boy fell into the well bore seriously!

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (05/08/2014)

கடைசி தொடர்பு:12:47 (05/08/2014)

கர்நாடகா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரம்!

பாகல்கோட்: கர்நாடக மாநிலம், பாகல்கோட் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி 3வது நாளாக நடந்து வருகிறது. சிறுவனை மீட்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

பாகல்கோட் மாவட்டம் சுளிகெரே கிராமத்தில், கடந்த 3ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் திம்மண்ணா ஹட்டி என்ற 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். 240 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில், சிறுவன் 160 அடியில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிறுவனை மீட்க ஆழ்துளை கிணற்றை ஒட்டியுள்ள இடத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணைத் தோண்டும் பணி மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 90 அடி ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டிருக்கிறது.

சிறுவன் 160 அடியில் சிக்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், இன்னும் இரண்டு நாட்கள் மீட்புப் பணிகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் சுவாசிப்பதற்காக தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்படுகிறது. என்றாலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் சிறுவனின் உடல் அசைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவனின் நிலை குறித்து அறிய பயன்படுத்தப்பட்ட ரோபோவில் கோளாறு ஏற்பட்டதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. சிறுவனை மீட்கும் பணியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஹட்டி தங்கச் சுரங்கத்தைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்