புதுவை: 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்! | Puduchery, 3 nominated MLA, President nod

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/09/2014)

கடைசி தொடர்பு:18:30 (02/09/2014)

புதுவை: 3 நியமன எம்.எல்.ஏக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

புதுவை: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஜனாபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு புதுவையில் நடந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது அவர் சட்டசபையில் தனது பலத்தை அதிகரிக்கும் வகையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடிவு செய்தார் ஆனால் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்காததால் நியமன எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பா.ஜனதவுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ பதவி தரப்படும் என்ற நிபந்தனையுடன் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா ஆட்சியில் அமர்ந்ததால், இதை ரங்கசாமி அரசு பயன்படுத்திக் கொண்டு மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது.

இதன்படி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால் ஆகியோருக்கும் பா.ஜனதாவை சேர்ந்த விஸ்வேஸ்வரனுக்கும் நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்க முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்து, அந்த பரிந்துரை கடிதத்தை கவர்னர் அஜய்குமார் சிங்கிடம் கடந்த மாதம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வழங்கினார்.

அந்த கடிதத்தை டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். அதற்கு இப்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த மூவரும் நியமன எம்.ஏ.க்களாக ஆகிறார்கள்.

- ஜெ. முருகன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்