முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு சுமுக தீர்வு: முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்!

சென்னை: முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு சுமுக தீர்வுகாண முயற்சிப்பேன் என்று முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான பி.சதாசிவம், கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) கேரள கவர்னராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில், விவசாய குடும்பத்தில், ஏழை விவசாயிக்கு மகனாக பிறந்த எனக்கு, இவ்வளவு பெரிய ஒரு பதவியை தந்து கவுரப்படுத்தியது மிகுந்த மனமகிழ்ச்சியை தருகிறது. இதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்த அனுபவத்தையும், அரசியல் சட்ட அனுபவத்தையும் கொண்டு ஆளுநர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அந்த மக்களின் முன்னேற்றத்திற்கும் திறமையாக பணியாற்றுவேன்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்னையை பொறுத்தமட்டில் அந்த வழக்கில் இரு மாநில அரசுகளும் எந்தெந்த வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மிக தெளிவாக சில வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வழிமுறைகளை இரு மாநில அரசுகளும் கடைபிடித்து சுமுக தீர்வுகாண முயற்சிப்பேன்" என்றார்.

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை (பாரதீய ஜனதா தலைவர்) விடுவித்ததற்கு பரிசாக உங்களுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''இது முற்றிலும் தவறான பொய் பிரசாரம். அந்த வழக்கில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நாங்கள் உத்தரவை பிறப்பித்தோம்.

முடித்து வைத்த ஒரு வழக்கில் மீண்டும் எப்.ஐ.ஆர். பதிவு செய்தது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. சட்ட விதிகளுக்கு முரணாக பதிவு செய்த எப்.ஐ.ஆரைத்தான் ரத்து செய்தோம். சட்டத்துக்கு புறம்பாகவோ, விதிமுறைகளை மீறியோ நாங்கள் செயல்படவில்லை. சிலர் தவறாக புரிந்து கொண்டு தவறான பிரசாரம் செய்கின்றனர்"என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!