வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (05/09/2014)

கடைசி தொடர்பு:08:47 (05/09/2014)

காணாமல்போன மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வைகோ வலியுறுத்தல்!

சென்னை: கடலில் காணாமல்போன மூன்று மீனவர்களை தேடும் பணியை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடமேற்குப் பகுதியிலிருந்து ஆகஸ்டு 25 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் நான்கு பேர் மறுநாள் கரை திரும்பவில்லை. இலங்கை நெடுந்தீவுக்கு அருகில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, மீனவர்களின் விசைப் படகு கடலில் மூழ்கியது. படகில் ஜான் கென்னடி, டேனியல், வில்சன், எஸ்ரோன் ஆகிய நான்கு மீனவர்கள் இருந்தனர். படகு மூழ்கியதும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஜான் கென்னடி மட்டும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, பாம்பனுக்கு அழைத்து வரப்பட்டார். மற்ற மூன்று மீனவர்களின் கதி என்ன ஆயிற்று என்று இதுவரை தெரியவில்லை.

மீனவர்கள் காணாமல்போன தகவலை மீன்துறை அதிகாரிகளிடம் பாம்பன் மீனவர்கள் முறையிட்டுள்ளனர். பாக் நீரிணைப் பகுதியில் காவல் பணியில் உள்ள கடலோர காவல்படை, காணாமல் போன மீனவர்களை மீட்க எந்த அக்கறையும் காட்டவில்லை. இதனால் கொந்தளித்துப்போன மீனவர்கள் பாம்பனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று மீனவர்கள் கடலில் காணாமல் போய் 10 நாட்கள் ஆனபின்பும், இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் பணியில் இறங்காதது கண்டனத்துக்கு உரியது ஆகும்.

நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆகின்றன. ஆனால், தமிழக மீனவர்களின் இன்னல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், மீன்பிடி படகு உள்ளிட்ட உடைமைகளை பறிமுதல் செய்வதும் நீடித்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படையினரால் பறிக்கப்பட்ட 62 மீன்பிடிப் படகுகளை மீட்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் தொழிலுக்குப் போகாமல் ஜூலை 25 ஆம் தேதியிலிருந்து 38 நாட்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கைக்கு மத்திய-மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை என்றாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இருநாட்களுக்கு முன்பு மீன் பிடித் தொழிலுக்குச் சென்றனர்.

கச்சத் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை மீண்டும் சிங்கள கடற்படை கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படை கைது செய்துள்ள 15 மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 63 படகுகளை மீட்கவும் உடனடியாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போன மூன்று தமிழக மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க இந்தியக் கடலோர காவல்படை மூலம் தேவையான ஏற்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்