ஐ.நா.சபையில் ராஜபக்சே பங்கேற்பு: கருணாநிதி-மு.க.ஸ்டாலின் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு!

சென்னை:  ஐ.நா.சபையில் ராஜபக்சே பங்கேற்று பேச கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி, மு.க.ஸ்டாலின் கறுப்பு சட்டை அணிந்தனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். இதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வரலாறு காணாத அளவுக்கு மனிதஉரிமை மீறல்களை அரங்கேற்றிய ராஜபக்சே, தமிழ் இன படுகொலையில் ஈடுபட்டதால் அவர் ஐ.நா.வில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 26.8.14 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய டெசோ கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.

டெசோ கூட்டத்தில் வலியுறுத்தியபடி, ராஜபக்சேவை ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு இதுவரை வலியுறுத்த வில்லை. ஐ.நா. பொது மன்றமும் ராஜபக்சேவுக்கு அனுப்பிய அழைப்பிதழை திரும்ப பெற்றுக்கொள்ள வில்லை.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளில், ஈழத்தமிழர் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 25 ஆம் தேதி அன்று அவரவர் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி வைப்பதோடு கறுப்புசட்டை அணிதல், கறுப்பு சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் கடும் கண்டனத்தை எதிரொலித்திடுவோம் என்று கூறியிருந்தார்.

அதன்படி இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டு வாசலில் இருபுறமும் கறுப்புகொடி ஏற்றப்பட்டிருந்தது. கருணாநிதியும் கறுப்பு சட்டை அணிந்து அறிவாலயம் சென்றார். இதேபோல், ஆழ்வார் பேட்டையில் உள்ள தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அவரும் கறுப்பு சட்டை அணிந்திருந்தார்.

மேலும், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வீடு, கனிமொழி எம்.பி. வீடு உள்பட அனைத்து தி.மு.க. பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், தொண்டர்கள் வீடுகளிலும் இன்று காலையிலேயே கறுப்புகொடி ஏற்றி இருந்தனர். இதேபோல், அண்ணா அறிவாலயத்திலும், தி.மு.க.வினரின் கடைகள், அலுவலகங்களிலும் கறுப்புகொடி ஏற்றப்பட்டிருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தார். சென்னை அசோக்நகரில் உள்ள ‘அம்பேத்கர் திடல்’ கட்சி அலுவலகத்தில் அவர் கறுப்பு கொடி ஏற்றி, ஐ.நா. மன்றத்தில் இனப் படுகொலை செய்த ராஜபக்சே பேசுவதற்கு எதிரான கண்டன கோஷங்களையும், இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!