ஐ.நா.சபையில் சாத்தான் வேதம் ஓதியது: ராஜபக்சே உரைக்கு வைகோ கண்டனம்!

சென்னை: ஐ.நா.சபையில் சாத்தான் வேதம் ஓதியது என்று ராஜபக்சேவின் உரைக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய ஒரு கொடிய கொலைகாரன், குற்றங்களை விசாரிக்க வேண்டிய நீதிபதி மீதே குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் அவமானக் கேடு ஐ.நா.சபையில் நேற்று (25.09.2014) நிகழ்ந்துள்ளது.

இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, பச்சிளம் குழந்தைகளை, பாலகர்களை, தாய்மார்களை, வயது முதிர்ந்தோரை களத்தில் ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை ஈவு இரக்கம் இல்லாமல் உலகம் தடை செய்த குண்டுகளைப் பயன்படுத்தியும், ராணுவத்தை ஏவியும் கொன்று குவித்து, தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே பன்னாட்டு நீதி விசாரணைக்கு ஆளாக வேண்டிய குற்றவாளி ஆவான்.

அத்தகைய கொடியவன் ஐ.நா. மன்றத்தின் பொதுச் சபையில், ஐ.நா. அமைப்பையே குற்றம் சாட்டியதும், இலங்கையில் சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணைக்கு தீர்மானித்த ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலின் மீது களங்கம் கற்பித்து, உலகத்தில் சில நாடுகள் தங்கள் சொந்தத் திட்டத்தை நிறைவேற்ற, மனித உரிமைகள் என்ற கருவியை பயன்படுத்துகிறார்கள் என்றும், ஐ.நா. அமைப்பில் பாரபட்சமான போக்கு நிலவுவதாகவும், அதனால் ஐ.நா.வின் நம்பகத்தன்மைக்கே கேடு என்றும் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டியுள்ளான். இதைவிட ஒரு அவமானம் ஐ.நா.அமைப்புக்கு இருக்க முடியாது.

ஏழரைக்கோடி தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் என்ற நிலையில், இந்தியாவின் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிங்கள அதிபர் ராஜபக்சேவுக்கு மனித உரிமை கவுன்சிலில் ஆதரவு தெரிவித்ததும், இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்துக் கௌரவப்படுத்தியதும், உலக நாடுகள் மன்றத்தில் இப்படி எல்லாம் வசை பாடுவதற்கு துணிச்சலையும், திமிரையும் ஏற்படுத்தியது என்பதுதான் உண்மையாகும்.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டியே தொடர்ந்து இந்தியா மேற்கொள்ளும் என்று உறுதி அளித்ததும் இன்னொரு காரணமாகும்.

இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடின்றி கோடான கோடி தமிழர்கள் கொந்தளித்ததும், 19 தமிழர்கள் தீக்குளித்து மடிந்து உயிர்த் தியாகம் செய்ததையும், இன்றைய நிலையிலும் தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான ஆத்திரமும் வேதனையும் ஏற்பட்டிருப்பதையும் இந்திய அரசு துச்சமாக எண்ணி, தமிழர்களை கிள்ளுக் கீரையாக நினைக்கின்ற போக்கு நீடிக்கிறது.

ஐ.நா.அமைப்புக்கே அவமரியாதை செய்கின்ற கொலைகார ராஜபக்சேவை இத்தனைக்குப் பின்னரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க முற்படுவது தமிழர்களின் காயப்பட்ட நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கிற செயலாகும். கொடுமைக்கும் அநீதிக்கும் முடிவு ஒரு நாள் வந்துதான் தீரும். நடப்பது அனைத்தையும் வரலாறு தமிழர்களின் மனதில் பதித்துக்கொண்டே வருகிறது. வினை விதைக்கிற வேலையை இந்திய அரசு தொடர வேண்டாம் என தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!