மக்கள் இதயங்களில் இருந்து ஜெயலலிதாவை அகற்ற முடியுமா? எதிர்க்கட்சிகளுக்கு சரத்குமார் சவால்

சென்னை: அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று அறிக்கை மேல் அறிக்கை வெளியிடும் எதிர்க்கட்சிகள், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளதை அகற்ற முடியுமா?என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்களுக்கு எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி, நல்லாட்சி புரிந்து வந்துள்ள ஜெயலலிதா எதிர்க்கட்சிகளால் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்தித்து விரைவில் வெற்றி காண்பார் என்பது உறுதி.

தமிழகத்தில் அமைதி நிலவுகிற போது, சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சிதைந்து விட்டது, அமைதி இழந்து விட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் புலம்பி குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது. ஏனென்றால் இப்படிக் குற்றம் கூறுபவர்கள் முன்பு கைது செய்யப்பட்ட போது, திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை மக்கள் மறந்து விடவில்லை.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ள தேர்தல் களத்தில் சந்தித்து படுதோல்வி அடைந்தவர்கள், மக்கள் அவர்களுக்கு எதிராக அளித்த தீர்ப்பை, மறந்து விட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.

தமிழகத்திற்கு வன்முறைக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது யார் என்பதை இந்த நாடே அறியும். சட்டம்– ஒழுங்கு காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்து வருகிற நிலையில் சட்டம்- ஒழுங்கை மேற்கோள் காட்டி, மாநில சுயாட்சி பற்றி முழங்கியவர்கள், இன்று மாநில நிர்வாகத்தைக் கவனிக்க, மத்திய அரசை அழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் மக்கள் மன்றம் தகுந்த பதில் அளிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கும், காவிரிப் பிரச்னைக்கும், முல்லைப் பெரியார் பிரச்னைக்கும் மத்திய அரசை அழைக்காதவர்கள், அ.தி.மு.க. அரசைக் கவிழ்க்க மத்திய அரசை அழைக்கிறார்கள். முதலில் 355 சட்டப் பிரிவை கொண்டு வாருங்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அடுத்து 356 தானாக வராதா? என்ற ஆசையில் பலர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று அறிக்கை மேல் அறிக்கை வெளியிடுகிறார்கள், ஆனால் கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கிறாரே? அதை உங்களால் அகற்றமுடியுமா?

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நல்லதொரு தீர்ப்பு கிடைக்கப் பெற்று, சோதனைகளை வென்று, புது எழுச்சியோடு திரும்ப வருவார். அதுவரைக்கும் அனைவரும் அமைதி காப்போம். மக்களைத் தூண்டி விடுகிற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் அவற்றை முறியடிப்போம்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!