வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (10/10/2014)

கடைசி தொடர்பு:17:14 (10/10/2014)

கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்குகளில் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்!

சென்னை: கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட இரண்டு அவதூறு வழக்குகளில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜரானார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியதாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியானது.

அந்த கடிதத்தில், ‘ம.தி.மு.க. நிர்வாகிகள் எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன் ஆகியோரை தி.மு.க.விற்கு இழுத்து, ம.தி.மு.க.வை முதலமைச்சர் கருணாநிதி அழிக்க பார்க்கிறார்’ என்று எழுதப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சார்பில், வைகோ மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல, சினிமா பட இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் 2009ஆம் ஆண்டு தாக்கப்பட்டது குறித்து புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கண்டனம் தெரிவித்து பேசினார். அப்போது, கருணாநிதி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக, வைகோ மீது கருணாநிதி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளும் சென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகள் நீதிபதி கோமதி ஜெயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ நேரில் ஆஜரானார். ஆனால் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நவம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்