ஜெ. அனுமதியின்றி யாரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டாம்: அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு!

சென்னை: ஜெயலலிதா அனுமதியின்றி, அவரது சார்பாக யாரும் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்ய வேண்டாம் என அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பி.பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திலும், பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த மனுக்களை வேண்டுமென்றே விஷமத்தனமாக, தீய எண்ணத்துடன் யாரோ தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, இதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜாமீன் கோரி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அவர் மீது தவறான எண்ணத்தை நீதிபதிகளிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச் செயல் இது என்பதை எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளேன்.

மேலும், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களை, அவருடைய வழக்கறிஞர்கள் குழு கவனித்துக்கொள்ளும் என்பதையும், ஜெயலலிதாவின் அனுமதியின்றி எவ்வித மனுக்களையும், யாரும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!