திருச்சி அருகே டாஸ்மாக் மது அருந்திய 3 பேர் பலி!

திருச்சி: டாஸ்மாக் கடையில் மது அருந்திய 3 பேர் இறந்த சம்பவம் திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி, கணபதிநகர் சாலியார் தெருவில் வசிப்பவர் கணபதி. பொதுப்பணித்துறையில் ஊழியராக பணி புரிந்து வரும் இவர், நேற்று கிருஷ்ணாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். வழியில் முசிறி பஸ் நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார்.

மது அருந்திய சிறிது நேரத்தில் கணபதியால் நடக்க முடியாமல், வழியில் மயங்கி விழுந்துள்ளார். அவரை காவிரி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வம்  என்பவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணபதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை ஆட்டோ டிரைவர் செல்வம், கணபதியின் மனைவியிடம் சொல்வதற்காக சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில், அதே டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்து விட்டு ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். மது குடித்த சிறிது நேரத்தில் ஆட்டோவை ஓட்ட முடியாமல் பரிதவித்த செல்வம், வாந்தி எடுத்து ஆட்டோவின் முன் பகுதியிலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

இதேபோல், அந்தரப்பட்டியை சேர்ந்த கணேசமுருகன் என்பவரும் அதே டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். இவரும் மது அருந்திய சிறிது நேரத்தில், வாந்தி எடுத்து ரோட்டில் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.

இதுகுறித்து, கணபதியின் மனைவி பேபி முசிறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் முசிறி இன்ஸ்பெக்டர் வேலு, சரக்கில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்து 3 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சி.ஆனந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!