காவல் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,   சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் செய்யது முகம்மது என்ற வாலிபர் சுட்டுகொல்லப்பட்டார். நீதிபதியின் விசாரணைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த செய்யது முகம்மதுவின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பின் உடலை செய்யது முகம்மதுவின் உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைக்க முயன்றனர்.

ஆனால், செய்யது முகம்மதுவை சுட்டுகொன்ற போலீஸ் எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும். பலியான செய்யது முகம்மதுவின் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து விட்டனர்.

இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, ''நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே மேல் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு சில தினங்கள் ஆகும்" என எஸ்.பி கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த செய்யது முகம்மதுவின் உறவினர்கள், நீதிபதி அறிக்கை அளித்த பின் உடலை வாங்கிக்கொள்வதாக கூறி சென்றனர். இதனால், பிரேத பரிசோதனை செய்யபட்ட செய்யது முகம்மதுவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக  சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!