கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை: சகாயம் குழுவுக்கு தமிழக அரசு அனுமதி!

மதுரை:  மதுரை பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் விசாரணைக் குழு ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அரசின் உத்தரவு கடந்த 31 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட கனிம வளத்துறை தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில்," சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணைக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதன் நகல் சகாயத்திற்கும் அனுப்பப்பட்டது. கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அவர், விரைவில் மதுரை வந்து விசாரணையைத்  தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் கூறுகையில், "தமிழக அரசின் உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி விசாரணைக்குழுவுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம்" என்றார்.

தற்போது அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் பதவியில் இருக்கும் சகாயம், இன்னும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படவில்லை. விரைவில் அந்தப்  பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் சகாயம் தனது விசாரணையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக மதுரையில் சில வாரம் முகாமிட்டு கிரானைட்  குவாரிகளில் நடந்த முறைகேடுகளின்   புள்ளி விவரங்கள் மற்றும் ஆவணங்களையும் திரட்டி அறிக்கையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சகாயம் திட்டமிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!