வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (08/11/2014)

கடைசி தொடர்பு:14:10 (08/11/2014)

கிரானைட் கொள்ளை: கருணாநிதி விளக்கம் அளிக்க முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்!

சென்னை: கருணாநிதியின் குடும்பத்தினர் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டது சகாயம் அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டிருந்ததாகவும், இதற்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலளிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "கிரானைட் முறைகேடு குறித்து ஜெயலலிதா தலைமையிலான அரசு தொடர்ந்து அறிக்கை அனுப்பும்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவரை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் 19.5.2012 நாளிட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளார்.

ஆனால் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து இரண்டே நாட்களில் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இரண்டே நாட்களில் மதுரை மாவட்டத்திலுள்ள 175 கிரானைட் குவாரிகளையும் ஆய்வு செய்ய இயலுமா? அவ்வாறு ஆய்வு செய்து முறைகேடே இல்லை என்று தெரிவித்தது முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்தது போல முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் கிரானைட் முறைகேடு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எப்படிப்பட்ட விசாரணையை மேற்கொண்டார் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் தோலுரித்துக் காட்டியுள்ளது.  

கிரானைட் முறைகேடு தொடர்பாக அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விவரத்தை எனது அறிக்கையில் நான்  விரிவாக தெரிவித்தும் அதைப் பற்றி கேள்வி கேட்டுள்ளார் கருணாநிதி. எனவே, சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை மீண்டும் சுருக்கமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 i)    மதுரை மாவட்டத்தில் 175 கிரானைட் குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டு, 84 கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 ii)    77 குவாரிகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன;

6 குவாரிகள் நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் உள்ளன; ஒரு குவாரியின் உரிமம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது.

 iii)    இந்த தற்காலிக ரத்து ஆணைகளுக்கெதிராக குவாரி உரிமையாளர்கள் 57 நீதிப் பேராணை மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தடையாணைகளைப் பெற்றனர்.  இந்த வழக்குகள் அனைத்தும் தொகுப்பு வழக்குகளாக மாற்றப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளன.

 IV)    83 தனியார் கிரானைட் நிறுவனங்களால் முறைகேடாக வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட கற்களின் சந்தை மதிப்பான 13,748 கோடி ரூபாய் செலுத்துமாறு மதுரை மாவட்ட ஆட்சியரால் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குறிப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றின் மீது குவாரி உரிமையாளர்களால் தடையாணைகள் பெறப்பட்டு அதில்
57 வழக்குகளை உயர்நீதிமன்றம் 2.9.2014 அன்று தள்ளுபடி செய்தது. 5 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

V)    அரசு புறம்போக்கு நிலங்களில் வைக்கப்பட்டிருந்த 24,751 கிரானைட் கற்களை கையகப்படுத்த மாவட்ட ஆட்சியரால் பிரசுரிக்கப்பட்ட அறிவிக்கைகளை எதிர்த்து 6 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை 8.8.2014 அன்று முடிவுற்று 5.11.2014 அன்று ரிட் மனுக்கள் அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  இதனை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியரால் மேல்முறையீடு செய்யப்படும்.

VI)     கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 90 முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை 24 முதல் தகவல் அறிக்கைகளுக்கு தடையாணை பிறப்பித்துள்ளது.  இதனை நீக்கக் கோரும் மனு தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்பதை திரு.கருணாநிதி இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.

கருணாநிதியின் பேரன் பங்குதாரராய் உள்ள ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தை ஆய்வு செய்த அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் .சகாயம், ஒலிம்பஸ் நிறுவனம் சட்டத்துக்கு விரோதமாக கிரானைட் எடுத்திருந்ததை உறுதி செய்ததாக தெரிவித்து இதன் மூலம் கருணாநிதியின் குடும்பத்தினர் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டதை சகாயம் தெளிவுபடுத்தியிருந்ததை எனது முந்தைய அறிக்கையிலேயே சுட்டிக் காட்டியிருந்தேன். இதற்கு கருணாநிதியின் பதில் என்ன?" என்று கூறியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்