Published:Updated:

`கையில் காசும் இல்லை... உணவுக்கு வழியுமில்லை!’ -மகாராஷ்டிராவில் தவிக்கும் 35 தமிழர்கள்

மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள்
மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயப் பொருள்களை விற்பனை செய்யும் கம்பெனியில் வேலைபார்த்து வந்த 35 தமிழர்கள், லாக்டௌன் காரணமாகச் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமலும் உணவுக்கு வழியின்றியும் தவித்து வருகிறார்கள். 

கொரோனா பாதிப்பு காரணமாகப் பல்வேறு இடங்களில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு சார்பாகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆனாலும், சில இடங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறி ரயில் நிலையம் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அத்தகைய நெருக்கடியான சூழலில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ளனர்.

`வயதான தாய் தந்தையைப் பார்க்கச் செல்கிறேன்!' - நெல்லையில் வட மாநிலத் தொழிலாளி நெகிழ்ச்சி

மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத் தலைநகரில் உள்ள இளைஞர்கள் சிலர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். அதில் பேசும் நபர், ``நாங்கள் 35 பேர் மகாராஷ்டிராவில் சிக்கியிருக்கிறோம். எங்களுக்கு இப்போது உணவுப் பொருள்கள் கையிருப்பு இல்லை.

பசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை!

உணவுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்குத் தேவையான பணமும் எங்களிடம் இல்லாததால் பசியில் தவிக்கிறோம். அதனால்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறோம். தமிழக அரசு எங்களை இங்கிருந்து எப்படியாவது மீட்டுச் செல்ல வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

வீடியோவில் பேசிய நபர்களில் ஒருவரான நிலவழகன் என்பவரிடம் பேசினோம். ``தமிழ்நாட்டின் தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல், கடலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 35 பேர் இங்கு வேலை செய்து வந்தோம்.

வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழர்கள்
வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழர்கள்

நாங்கள் அனைவரும் இங்குள்ள அக்ரோ நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணி செய்து வந்தோம். லாக்டௌன் காரணமாக எங்களால் கடந்த இரண்டு மாதமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால் கம்பெனி கொடுத்திருந்த அறையிலேயே முடங்கிக் கிடந்தோம்.

ஆரம்பத்தில், தினமும் எங்களுக்குச் சமூக ஆர்வலர்கள் மூலம் சாப்பாடு கிடைத்தது. அதனால், எந்தக் கவலையும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு ரூமிலேயே இருந்தோம். பின்பு, சமூக ஆர்வலர்கள் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களைக்  கொடுத்துவிட்டுப் போனார்கள். அதை வைத்து சில நாள்கள் சமாளித்தோம்.

கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகிவிட்டதால் உணவுப் பொருள்கள் வாங்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழர்கள்

மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பின்னர் எங்களை வந்து பார்க்கக் கூட ஆள் இல்லை. எங்கள் நிறுவனமும் சம்பளம் கொடுக்காததால் கையில் இருக்கும் பணத்தை வைத்து பொருள்களை வாங்கிச் சமைத்துச் சாப்பிட்டோம். இப்போது எங்களிடம் பணமும் இல்லை. அதனால் பசியால் தவிக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு