பாதுகாப்பாற்ற நிலையில் திருமால் சிற்பங்கள்!

விழுப்புரம்:  பாதுகாப்பற்ற நிலையில் பல்லவர், சோழர் கால திருமால் சிலைகள் இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூதூரில்   பல்லவர், சோழர் காலங்களைச் சேர்ந்த பழைமையான  திருமால் சிற்பங்கள் கேட்பாரற்ற நிலையில் இருப்பதாகவும், இச் சிற்பங்களைப்  பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

பூதூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில்  இடதுபுறத்தில் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த திருமால் சிற்பமும், வலதுபுறத்தில் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த திருமால் சிற்பமும் உள்ளன.

விழுப்புரத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கூறுகையில், "பல்லவர் கால திருமால் சிற்பம் நான்கரை அடி உயரமும், இரண்டே கால் அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த சிற்பம் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கும் திருமாலின் மேற்கரங்களில் ஒன்றான வலது கரத்தில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் உள்ளன. திருமாலின் தலையை அலங்கரிக்கும் கிரீடம் சுண்ணாம்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் அது சிதைத்த நிலையில் காணப்படுகிறது.

சோழர் கால திருமால் சிற்பமானது, நான்கு கரங்களுடனும் கிரீடத்துடனும், மகுடத்துடனும் காட்சியளிக்கிறது. திருமாலின் வலது மார்பில் திருமகளுக்கு இடம் அளிக்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சம். திருமாலின் வயிற்றுப் பகுதியை மடிப்பு வடிவில் வடிவமைத்திருப்பது சோழர்கள்கால கலை உணர்வை வெளிப்படுத்துகிறது. இந் நிலப் பகுதியை பல்லவர்களும், சோழர்களும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம்  நுற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டுள்ளனர்" என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!