சனிப்பெயர்ச்சி: களை கட்டியது திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில்!

காரைக்கால்: சனிப்பெயர்ச்சி நடப்பதையடுத்து, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் களைகட்டியுள்ளது.

காரைக்கால், திருநள்ளாறில் அமைந்திருக்கிறது ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில். உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலின் உள் வளாகத்தினுள் தனியாக அமைந்திருக்கிறது சனீஸ்வர பகவான் ஸ்தலம்.

இந்தக் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப் பெயர்ச்சி விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று (16ஆம் தேதி) மதியம் சரியாக 2.43 மணிக்கு சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அப்போது சனி பகவான் துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதையடுத்து, அங்கு அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், நெரிசலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் சட்டம் ஒழுங்கு, ஐ.ஆர்.பி, மத்திய தொழில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து ஐநூறு போலீசார்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
   
பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் மூலமாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் 14 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் சுமார் எட்டு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வருடம் சுமார் பத்து லட்சத்திக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ஜெ.முருகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!