நீதிபதி குன்ஹாவை கண்டித்து தீர்மானம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அ.தி.மு.க மேயர்!

சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கி்ல் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றிய வேலூர் அ.தி.மு.க மேயர் கார்த்தியாயினி, சென்னை உயர் நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் ஜான் டி குன்ஹாவை கண்டித்து, வேலூர் மாநகராட்சியில் செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீதிபதியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து தி.மு.க வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வேலூர் மேயர் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டிருந்ததது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தியாயினி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, மேயர் மன்னிப்பு கேட்டதாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மன்னிப்பு கடிதத்தை நீதிபதி குன்ஹாவுக்கு அனுப்பி வைக்கவும்,  மன்னிப்பு விவரத்தை பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவும் கார்த்தியாயினிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

படம்: ச.வெங்கடேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!