ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார்: மதுரை ஆதீனம் ஆருடம்!

சிவகாசி:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று  மீண்டும் தமிழக முதல்வராவார் என்று  மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் சிவகாசியில்  நடைபெற்ற எம்ஜிஆர் 27ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதினம்  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "பொதுவாக நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்து சமயத்திலிருந்து மற்ற மதத்திற்கு மாறியவர்கள்தான். மீண்டும் அவர்கள், தாய்க்  கழகத்தில் இணைவதுபோல இந்து மதத்தில் சேரலாம்.ஜெயலலிதா முன்பு மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார். அதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனவே மத்திய அரசின் மதமாற்ற தடை சட்டம் பெரும் பிரச்சனையாகாது என்று கூறினார்.

மேலும் ஆதினம் கூறுகையில்,  உண்மை தூங்காது ஜெயலலிதா நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராவார். மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி துணிவோடும், தெளிவோடும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திருஞானசம்பந்தருக்கு மங்கையர்க்கரசி உறுதுணையாக இருந்தார்.அதுபோல ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சிறப்பாக ஆட்சி செய்தார். தற்போதும் தமிழக மக்களை வழிநடத்தி செல்கிறார்.

சிறப்பான ஆட்சியாகவும், மக்களுக்குத் தேவையான ஆட்சியாகவும் இருப்பதாலும், ஜெயலலிதா உறுதியாக முடிவு எடுப்பதாலும், நான் அதிமுக ஆட்சிக்கும், ஜெயலலிதாவிற்கும் உறுதுணையாக  உள்ளேன்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!