குரூப்-1 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி!

சென்னை: காவல்துறையில் அதிகாரிகள் பணியிடங்கள் அதிகம் காலியாக இருப்பதால், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியாகிறது என்று  டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி-2-அ) அடங்கியுள்ள 2 ஆயிரத்து 760 காலி பணியிடங்களுக்கு (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி எழுத்து தேர்வு நடந்தது. வெற்றிபெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்டு, கடந்த 29 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடங்கியது. இதில் முதல் 10 இடங்களைப்  பிடித்தவர்களுக்கான துறை ஒதுக்கீடு ஆணை, சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டது.

பின்னர் தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்பிரமணியன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள நேர்முக எழுத்தர் பதவிக்கு 108 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வின் போது தலைமைச்செயலகம், சட்டப்பேரவை செயலகம், பதிவுத்துறை, வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற 29 துறைகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 760 பணியிடங்களில், 2 ஆயிரத்து 668 உதவியாளர், கணக்காளர், கீழ்நிலை எழுத்தர் பணியிடங்களும், 92 நேர்முக எழுத்தர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

குரூப்-1 தேர்வின் ஆரம்பகட்ட தேர்வு முடிவுகள் வரும் 15 நாள்களிலும், குரூப்-4 தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் குரூப்-1 மெயின் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2015-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது. காவல் துறையில் அதிகாரிகள் பணியிடம் அதிகம் காலியாக உள்ளது. இவற்றை நிரப்பவும் மற்ற துறை அதிகாரிகள் பணியிடங்களையும் நிரப்புவதற்காக, குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகிறது என்று அவர் தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!