Published:Updated:

`தனி விமானத்தில் அனுப்பப்பட்ட 372 மலேசியப் பயணிகள்!' - திருச்சியில் முடிவுக்குவந்த 7 நாள் போராட்டம்

மலேசிய பயணிகள்
மலேசிய பயணிகள்

திருச்சி விமான நிலையத்தில் செய்வதறியாமல் தவித்த 372 பயணிகள், தனி விமானம்மூலம் மலேசியா அனுப்பிவைக்கப்பட்டனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் பகுதியைச் சேர்ந்த 520-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், கடந்த 13-ம்தேதி தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அனைவரும், இம்மாதம் 20-ம்தேதி மலேசியா திரும்பிச் செல்வதற்காக, விமானம் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட்டன.

மலேசிய பயணிகள்
மலேசிய பயணிகள்

இதனால் மலேசிய சுற்றுலாப் பயணிகள் அனைவரும், இந்தியாவிலிருந்து மலேசியா திரும்பிச்செல்ல முடியாத நிலைக்கு ஆளானார்கள். இதைத் தொடர்ந்து கொச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விமானம் முன்பதிவு செய்திருந்த அவர்கள், கடந்த 19-ம் தேதி மொத்தமாக திருச்சி விமான நிலையம் வந்தனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்கள், தங்களின் சொந்த ஊரான மலேசியாவுக்கு அனுப்பி வைக்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தங்கள் கட்சியின் திருச்சி மண்டலச் செயலாளர் முருகானந்தம் மூலம் மலேசியப் பயணிகளை நேரில் சந்தித்து உதவிகள் செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மலேசிய சுற்றுலாப் பயணிகளிடம் மலேசிய துணைத் தூதரக அதிகாரி பிர்தவுஸ், காவல்துறை அதிகாரிகள் மணிகண்டன், பாலமுருகன் மற்றும் திருச்சி விமான நிலைய முனைய மேலாளர் சென் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மலேசிய பயணிகள்
மலேசிய பயணிகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, சுற்றுலாப் பயணிகளைத் தனி விமானம் மூலம் மலேசியா அனுப்பி வைப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.

அதனடிப்படையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் முதற்கட்டமாக 186 சுற்றுலாப் பயணிகள் மட்டும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையடுத்து மீதமிருந்த 334 பயணிகள், உணவு மற்றும் இருக்க இடமின்றி திருச்சியில் தவித்துவந்தனர். இந்நிலையில், கொச்சி மற்றும் சென்னையில் தவித்த மேலும் சில பயணிகள் நேற்று திருச்சி வந்தனர். அவர்கள் அனைவரையும் திருச்சியிலிருந்து இரு தனி விமானங்கள் மூலம் மலேசியா அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

`அதிகாலை திருமணம்; காய்ச்சல்.. தொடர் கண்காணிப்பில் விமானப் பயணிகள்!’ -திருச்சி ஸ்பாட் ரிப்போர்ட்

மீதமிருந்த 372 பயணிகளும் நேற்று இரவு மலேசியா அனுப்பிவைக்கப்பட்டனர். சரியாக இரவு 10 மணிக்கும் 11 மணிக்கும் தனி விமானங்கள் திருச்சியிலிருந்து மலேசியா சென்றது.

கடந்த 7 தினங்களாக மலேசியப் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் சொந்த நாடு செல்ல முடியாமல் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர்கள் தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதால், இரண்டு நாள்களாக நீடித்த அவர்களின் பதற்றநிலை முடிவுக்கு வந்தது.

அடுத்த கட்டுரைக்கு