தைப்பூசம்: முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

சென்னை: தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுளான முருகன் அவதரித்த நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.  எட்டாவது நட்சத்திரமான பூசம் நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். முருகன் அவதரித்த நாளும், பௌர்ணமியுமான இந்த சிறப்பு மிகுந்த நாளில் முருகனின் அனைத்து கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

மேலும், முருகனின் பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து தைப்பூசம் வரை விரதம் இருப்பார்கள். இந்த நேரத்தில் கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களையும் அன்றாடம் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள். இதைப்பூசம் அன்று பாதயாத்திரையாக முருகனின் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து தங்களது விரதத்தை முடிப்பார்கள்.

மேலும், முருகனடியார்களும் பாதயாத்திரையாக முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்று, முருகனை தரிசித்து வழிபாடு செய்வார்கள். இந்த நாள் முருகனின் அருளைப் பெறுவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

மேலும், தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், விரதமிருந்து முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.

அதன்படி இன்று தைப்பூசத்தையொட்டி, முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர்சோலை ஆகிய முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்து வழிபட்டனர்.

  தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

படங்கள்: ஏ.சிதம்பரம், வீ.சிவக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!