நில அபகரிப்பு தொடர்பான அரசாணை: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்! | Edict of land grabbing: High Court annulled

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (11/02/2015)

கடைசி தொடர்பு:12:54 (11/02/2015)

நில அபகரிப்பு தொடர்பான அரசாணை: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

சென்னை: நில அபகரிப்பு புகார்கள் குறித்து விசாரிக்க தனி போலீஸ் பிரிவு, தனி நீதிமன்றங்கள் அமைத்து தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நில அபகரிப்பு புகார்கள் குறித்து விசாரிக்க, கடந்த 2011-ஆம் ஆண்டில் தனி போலீஸ் பிரிவு அமைத்து தமிழக உள்துறைச் செயலர் அரசாணை வெளியிட்டார். இந்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அரசாணை செல்லாது என அறிவிக்கக்கோரி முன்னாள் எம்.பி. தாமரைச் செல்வன் உள்ளிட்ட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாட்சா, பால் வசந்த குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, நில அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு முதல் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு கூறியது.

அப்போது, ''நில அபகரிப்பு வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய தண்டனை சட்டத்திலேயே தீர்வு காண வழி உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தற்போது உள்ள நீதிமன்றங்களே போதுமானவை. இதற்காக தனி நீதிமன்றம் அமைக்கத் தேவையில்லை.

இந்த அரசு பொறுப்பு ஏற்றதும், நில அபகரிப்பு புகார்கள் குறித்து விசாரிக்க தனிப் போலீஸ் பிரிவு, வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை அமைத்து இரண்டு அரசாணைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணைகளில் நில அபகரிப்பு குறித்து வழிமுறைகள், விதிகள், அளவுகோல் பற்றி வரையறுக்கவில்லை. இதில் அதிகாரம் அனைத்தும் போலீசாருக்கே வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், போலீசார் தங்களுக்கு வேண்டப்படாதவர்கள் மீது இந்த வழக்கைப் பதிவு செய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த அரசாணையைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது. நில மோசடி குறித்து விசாரிக்க ஏற்கெனவே, இந்திய தண்டனைச் சட்டம், சொத்து மாற்றுச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்ற சட்டங்கள் உள்ளன.

இதன் மூலம் நிவாரணம் பெற வழி உள்ளது. எனவே தனியாகச் சட்டம் கொண்டு வர அவசியமில்லை. அதனால், நில மோசடி வழக்குகளை விசாரிக்க 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இரண்டு அரசாணைகளும் ரத்து செய்யப்படுகின்றன" என்று உத்தரவிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்