பெட்ரோல் விலை உயர்வு மனித நேயம் இல்லாத செயல்: ராமதாஸ்

சென்னை: பெட்ரோல் விலையை நுகர்வோர் மீது சுமத்துவது மனித நேயம் இல்லாத, வணிக நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 97 காசுகள் அதிகரித்து, ரூ.59.85 ஆகவும், டீசல் விலை 67 காசுகள் அதிகரித்து ரூ.49.58 ஆகவும் உயர்ந்துள்ளன. இந்த எரிபொருள் விலை உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

உலக அளவில் நிலவி வரும் தொழில்துறை மந்தநிலை காரணமாக பன்னாட்டுச் சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே கச்சா எண்ணெய் விலை சரிந்து வந்தது. ஆனால், இதன் முழுமையான பயனை நுகர்வோரால் அனுபவிக்க முடியவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 60 விழுக்காட்டிற்கும் மேல் குறைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைகளும் அதே அளவுக்கு குறைந்திருக்க வேண்டும். அதன்படி, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.35.00 ஆகவும், டீசல் விலை ரூ.28.00 ஆகவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15.64ம், டீசல் விலை ரூ.12.13ம் மட்டுமே குறைக்கப்பட்டன. எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கச்சா எண்ணெய் விலை சரிவின் பயனை முழுமையாக நுகர்வோருக்கு வழங்கவில்லை. இது நுகர்வோரைக் கொள்ளையடிக்கும் செயல் ஆகும்.

மற்றொருபுறம், மத்திய அரசு அதன் பங்கிற்கு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.7.75ம், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6.50ம் உயர்த்தி அதன் வருவாயை அதிகரித்துக் கொண்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி ஓய்ந்து, விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதன் பாதிப்பை எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக நுகர்வோர் தலையில் சுமத்துவது சரியல்ல. கச்சா எண்ணெய் விலை குறைந்த போது மறைமுகமாக லிட்டருக்கு ரூ.15 வரை லாபத்தை உயர்த்திக் கொண்ட எண்ணெய் நிறுவனங்கள்தான் இந்த இழப்பை முதன்முதலில் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களாலும் இழப்பை தாங்க முடியாத நிலை ஏற்பட்டால், மத்திய அரசு ஏற்கனவே உயர்த்திய கலால் வரியை குறைத்து நுகர்வோரை பாதுகாக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிதளவு உயர்ந்ததைக் கூட தாங்கிக் கொள்ளாமல் ஏற்கனவே இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் நுகர்வோர் தலையில் சுமத்துவது துளியும் மனித நேயம் இல்லாத, வணிக நோக்கம் கொண்ட நடவடிக்கையாகும்.

அத்தியாவசிய வாகன எரிபொருளான டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட கடுமையான விளைவுகள் ஏற்படும். உலக சந்தையில் இதே நிலையும், எண்ணெய் நிறுவனங்களின் இதே அணுகுமுறையும் தொடர்ந்தால் அடுத்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.100 என்ற உச்சத்தை தொட்டுவிடும் ஆபத்து உள்ளது. பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளால் அனைத்துத் துறைகளும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் சாதகத்தை விட நாட்டுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!