ஏப்ரல் மாதம் தொடங்குகிறது கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை!

சென்னை:  கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான வழித் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ  ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ  ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

இந்த வழித் தடத்தில் மின் இணைப்பு, சிக்னல் அமைக்கப்பட்டு மெட்ரோ  ரயில் சோதனை ஓட்டம் நடந்து முடிந்து விட்டது.  ரயில்  நிலையங்களில் பயணிகள் நுழையும்போது கண்காணிக்கும் சென்சார் கருவிகள், பயணச் சீட்டுகள் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் ஆகியவை அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இந்த வழித் தடத்தில் அமைந்துள்ள 7  ரயில் நிலையங்களிலும் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் கட்டத்தை நெருங்கி விட்டது. பிரதான கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மெட்ரோ  ரயில்களை இயக்கிப் பார்க்கும் சோதனை நடந்து வருகிறது.

அனைத்து  ரயில் நிலையங்களிலும் பணிகளை நிறைவு செய்து, மெட்ரோ  ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க கட்டுமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரத்துக்குள்  ரயில்  நிலையங்கள் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

மெட்ரோ  ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான ஆவணங்கள் அனைத்தும் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. வருகிற 20 ஆம் தேதிக்குப் பிறகு பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்வார்.

4 நாட்கள் இந்த ஆய்வு நடைபெறும். ஆய்வு முடிந்த பிறகு ஒரு வாரத்துக்குள் மெட்ரோ  ரயில் இயக்க அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்பிறகு தமிழக அரசுடன் பேசி மெட்ரோ  ரயில் சேவை தேதி, கட்டணம் ஆகியவை முடிவு செய்யப்படும். எனவே ஏப்ரல் மாதத்தில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரா  ரயில் சேவை தொடங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!