நித்யானந்தாவால் எனது உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதீனம் மனு! | Nithyananda my life is in danger: Madurai atinam Petition!

வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (03/03/2015)

கடைசி தொடர்பு:15:45 (03/03/2015)

நித்யானந்தாவால் எனது உயிருக்கு ஆபத்து: மதுரை ஆதீனம் மனு!

மதுரை: நித்யானந்தாவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மதுரை ஆதீனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2012ஆம் அண்டு மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த மணிவாசகம், கும்பகோணத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் மதுரை 1வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, மதுரை ஆதீனம் (அருணகிரிநாதர்), நித்யானந்தா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை நீக்கி விட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்தார். மேலும், இது தொடர்பான வழக்கை தொடர விரும்பவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக குறிப்பிட்டு நித்யானந்தா ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ''எனக்கும், அருணகிரிநாதருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக வழக்கை சந்தித்து வருகிறோம். இதில் பாதிக்கப்பட்டவன் நான். எனவே, வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புகிறேன். எனவே, இந்த வழக்கில் அருணகிரிநாதரை 3வது எதிர்மனுதாரராக சேர்த்து, வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (2ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் அருணிகிரிநாதர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ''தம்பிரானாக பணிபுரிபவரின் அடுத்த பதவிதான் இளைய ஆதீனம். தம்பிரானை இளைய ஆதீனமாக உயர்த்த பல்வேறு நடைமுறைகள் உள்ளன. நித்யானந்தா தம்பிரான் அல்ல. அவர் மதுரை ஆதீனத்தின் பக்தரும் இல்லை. நித்யானந்தா என்னிடம் ஆசி பெறவும், திருஞானசம்பந்தர் பற்றி தெரிந்து கொள்ளவும் தான் மடத்துக்கு வந்தார்.

பிடதி ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டே, மதுரை ஆதீன மடத்தில் பக்தராக இருக்க வேண்டும் என்று நித்யானந்தா நினைத்தார். ஒருவர் இரு வேறு தத்துவங்களை கொண்ட மடத்தின் சீடராக இருக்க முடியாது என அறிவுறுத்தினேன். ஆனால் நித்யானந்தா படிப்படியாக சைவ சித்தாந்தத்திற்கு மாறுவதாகவும், படிப்படியாக தியான பீடத்திலிருந்து வெளியேறுவதாகவும் கூறினார்.

அதன்படி அவர், மடத்தில் எனது கண்காணிப்பில் இருந்தார். இங்கு தங்கியிருந்த சில நாட்களில் பாரம்பரியமான மதுரை ஆதீனத்தின் பெயரை கெடுக்க முயன்றார். ஆதீன தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டார். மடத்தில் தங்காதது, ஆதீனத்தின் அனுமதியின்றி வெளியே சென்றது, தலையை மொட்டையடிக்காதது போன்ற காரியங்களை உற்று கவனித்து வந்தேன்.

அவரது நடவடிக்கைகள் ஆதீனத்திற்கு இணையாகவும், அதைவிட மேலானதாகவும் இருந்தன. ஆதீனத்திற்கு இணையாக உட்கார்ந்தார். அவர் தன்னை கடவுளாக கூறிக்கொண்டு மடத்தில் பூஜைகள் நடைபெறுவதை வெறுத்தார். தன்னைத்தானே 293வது ஆதீனமாக அறிவிக்கத் தொடங்கினார். இந்த சூழலில் நித்யானந்தா மீது பல்வேறு பாலியல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. நித்யானந்தாவின் ஒழுக்கமற்ற, சட்ட விரோத காரியங்களை பார்த்த பின்னர் கண்காணிப்பிலிருந்து என்னை விலக்கிக்கொண்டேன்.

பின்னர் கடந்த 19-10-2012 அன்று அவரை மடத்திலிருந்து வெளியேற்றினேன். அவர் மடத்தில் தங்கி இருந்த நாட்களில் ஆதீனத்தின் பெயரை பயன்படுத்தி பல குற்றச்செயல்களில் ஈடுபட்டார். ஆதீனத்தின் கையெழுத்தை போலியாக போட்டார். அடுத்த மடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்தார். தவறான எண்ணத்துடன் அறக்கட்டளை ஆவணம் ஒன்றையும் உருவாக்கி கையெழுத்து வாங்கினார். நித்யானந்தாவை குருட்டுத் தனமாக நம்பிவிட்டேன். ஆவணங்களில் திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் மோசடி செய்து நித்யானந்தா என்னிடம் கையெழுத்து வாங்கினார். அந்த ஆவணங்கள் ஆதீனத்தை கட்டுப்படுத்தாது.

நித்யானந்தா சமய சடங்குகளை செய்யவில்லை. தீட்சையும் பெறவில்லை. தன்னை மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக அவர் அறிவித்தது செல்லாது. அவருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவிடக்கூடாது. அறக்கட்டளை ஒப்பந்தத்தில் நித்யானந்தாவின் ஆட்கள் மிரட்டி கையெழுத்து பெற்றனர். எனவே நித்யானந்தாவை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும்.

மேலும், எனது உயிருக்கு நித்யானந்தாவால் ஆபத்து உள்ளது. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அந்த விசாரணை நிலுவையில் உள்ளது. நித்யானந்தாவும் இளைய ஆதீனமாக இல்லை என அவரது இணையதளத்தில் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கை விசாரிக்கத் தேவையில்லை. தள்ளுபடி செய்ய வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்