Published:Updated:

கோவையில் 2 திருநங்கைகள் உட்பட 4 பேருக்கு கொரோனா! - சிக்கலாகும் விமானப் போக்குவரத்து

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்

விமானம் மூலம் கோவைக்கு வந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் வரை சென்னைக்கு அடுத்து, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது கோவைதான். ஆனால், பாதிக்கப்பட்டிருந்தவர்கள் வேகவேகமாகக் குணமடைந்தனர். மொத்தம் பாதிக்கப்பட்ட 146 பேர்களில் ஒருவர் உயிரிழக்க, மற்ற 145 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். அதன்பிறகும், புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை.

கோவை
கோவை

இதையடுத்து, கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட்டு கோவை பச்சை மண்டலமாக மாறியது. இந்நிலையில், கடந்த வாரம் உள்நாட்டுப் போக்குவரத்து தொடங்கியவுடன் மீண்டும் பிரச்னை தொடங்கிவிட்டது.

விமானப் போக்குவரத்து தொடங்கிய முதல்நாளே, சென்னையில் இருந்து கோவை வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த விமானத்தில் பயணித்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லோரும் பதற்றமானார்கள். அதிர்ஷ்டவசமாக அவருடன் பயணித்த சக பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்

இதனிடையே,``தங்களது விமானத்தில் பயணிக்கும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமானங்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன” என்று இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவர்களில் பொள்ளாச்சியைச் சேர்ந்த 29 வயது திருநங்கைக்கும், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த 29 வயது திருநங்கைக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மும்பையில் இருந்து கோவை வந்த கணபதியைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கும், 50 வயது பெண் ஒருவருக்கும் ஸ்வாப் பரிசோதனை மூலம் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையம்
கோவை விமான நிலையம்

அவர்கள் 4 பேருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விமானம் மூலம் வந்தவர்களில் மட்டுமே இதுவரை கோவையில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து வந்ததால், பாதிப்பு கணக்கு அந்தந்த ஊர்களின் கணக்கில்தான் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு