ஈழ நிலைமையை தமிழக கட்சிகள் புரிந்துகொள்ளவில்லை - இலங்கை பத்திரிகையாளர்

அக்.11,2011

ஈழத்து இனப் படுகொலைக்கு எதிரான குரல்கள் சற்று அடங்கி, மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்றவேண்டும் எனற குரல்கள் உயர்ந்துள்ளன. அதுவும் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பில் ஈனஸ்வரத்துக்குப் போயுள்ள நிலையில், கடந்த 6-ம் தேதி சென்னையில் நடந்த இலங்கை பத்திரிகையாளர் ஒருவருடனான உரையாடல் நிகழ்வு, தமிழ் உணர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மனித உரிமை ஆர்வலரும் புலி ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுபவருமான பேராசிரியர் அ. மார்க்ஸ், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

'போருக்குப் பிந்தைய இலங்கையும் தமிழ் ஊடகங்களும்' என்ற தலைப்பில், கொழும்பில் இருந்து வெளியாகும் 'தினக்குரல்' நாளிதழின் ஆசிரியர் தனபாலசிங்கம் பேசினார். தொடங்குவதற்கு முன்பு அவரே சொன்னபடி, மேடைப் பேச்சு சரியாக வரவில்லை.

"இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகள்தான். மற்றவற்றிலும் கூடுதலாக, அரசியல் பிரச்னைகளை, தமிழ் மக்களின் பிரச்னைகளை அடியற்றியே நாங்கள் அலசல்களை அதிகமாகச் செய்துகொண்டு இருக்கிறோம். 2001 ஜனவரி தொடக்கம் 2010 ஜனவரி வரையில் தமிழ் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்ந்தது. விசாரணை முழுமை பெறவில்லை. ஒரு மாதம்கூட விசாரணை உருப்படியாக நடப்பதில்லை. அதிதீவிரமாக எழுதியவர்கள், வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள். கொஞ்சம் பேர் நாட்டில் இருந்துகொண்டு, சுய தணிக்கை செய்துகொண்டு எழுதி வருகிறோம். பத்திரிகைத் துறையைப் பயன்படுத்தி என்ன செய்யமுடியுமோ அதைச் செய்கிறோம்," என்று பேசியவர், அடுத்து அரசியலுக்கு மாறினார்.

"ஈழத்தைப் பற்றி அங்கே இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தமிழ் மக்கள் எதைக் கேட்கிறார்கள்? என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்? அங்குள்ள மக்கள் 30 வருட யுத்தத்துக்குப் பிறகு, நிமிர்ந்து எழக்கூட தயாராக இல்லை. இப்போது உயிர்ப் பிரச்னை, வீடு, வாசல், காணி பறிபோகுது. பாதுகாப்பு இல்லை. இதை இங்குள்ள அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளத் தயாராக இல்லை. போருக்குப் பின், தமிழ் மக்கள், தங்களிடம் கட்டுறுதியான சமூக, அரசியல்ரீதியில் வலுவான குரல் கொடுக்கக்கூடிய நிலைமை இல்லை. அகிம்சை, ஆயுதப் போராட்டங்கள் என 50 வருடங்களாக தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போதைய நிலைமையில் தமிழ் மக்கள் எதையும் செய்யமுடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். தங்களின் நிலைமையை சர்வதேச சமூகத்திடம் ஒன்றுபட்டு உணர்த்துவதற்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு திரட்சியாக வாக்களித்துள்ளனர்.

போர் வெற்றியில் சிங்கள மக்கள் மிதக்க விடப்பட்டுள்ளனர். அவர்கள் மத்தியில் முற்போக்கு சக்திகள் தமிழர்களுக்கு ஆதரவாக நின்றால், தங்களை துரோகி என முத்திரை குத்திவிடுவார்களோ என படுத்துக்கொண்டு இருக்கிறார்கள். தென் இலங்கையில் இருக்கும் நியாயபூர்வமான சக்திகளுடன் சேர்ந்துகொண்டு போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைதான் நீடிக்கிறது. தமிழ் மக்கள் எதையுமே பேசமுடியாதவர்களாக இருக்கிறார்கள். சர்வதேச நெருக்குதல் பயனளிக்கும் என மக்கள் நம்புகிறார்கள். தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. அந்த மக்கள் ஈழம் பற்றிப் பேச தயாராக இல்லை. எனவேதான் சொல்கிறேன், இங்குள்ளவர்களின் செயல்பாடுகள், அங்குள்ள தமிழ் மக்களின் பிரச்னைகளை அதிகரிப்பதாக இருக்கக்கூடாது. யதார்த்தமான பிரச்னையை திராவிட கட்சிகளும் சில உதிரி கட்சிகளும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

தமிழ்த் தேசிய உணர்வு எழுப்பப்படுவதற்கு சிங்கள சமூகமும் அரசும் தடையாக நிற்கிறது. தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் மர்ம் மனிதனின் தாக்குதல் எப்படி தொடர்ந்து நடக்கமுடியும்?

அரசைப் பொறுத்தவரை எந்தத் தீர்வுக்கும் தயாராக இல்லை. அரசு ஆதரவு ஈபிடிபி கூட தன் சொந்த சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. எந்த உரிமையையும் கேட்கமுடியாதபடி தமிழ் மக்கள் மலடாக ஆக்கப்பட்டு இருக்கிறோம். தமிழ் மக்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க, டெல்லியை தமிழகம் உதவியாக இருக்கவேண்டும்," என்று முடித்தார்.

கேள்வி - பதில் நேரத்தில், தனபாலசிங்கத்திடம் காரசாரமாகக் கேள்விகள் கேட்கப்பட்டது. "நான் அரசியல்வாதி இல்லை, பத்திரிகையாளன்தான்" எனச் சொல்லி, அசராமல் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தார், ரொம்பவும் பொறுமையாக!

- இரா.தமிழ்க்கனல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!