வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (13/10/2011)

கடைசி தொடர்பு:12:48 (13/10/2011)

மக்களவைக்கும் காங். இனி தனித்து போட்டி: தங்கபாலு

சென்னை, அக்.12,2011

பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்ற தேர்தல் வரை இனி காங்கிரஸ் தனித்து தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 12 பக்க தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதனை கட்சியின் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று சென்னையில் வெளியிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பஞ்சாயத்துராஜ் என்ற சொல்லுக்கு பழமையான சிறப்பு உண்டு. இதனை ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். மற்ற மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

இதனால் மக்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்கவில்லை. மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளோம். மேலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து உள்ளனர். இனி வரும் காலங்களில் பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்றம் தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும்.

திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை காப்பதற்காக காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் விவகாரம் சுப்ரீம் கோட்டில் விவகாரம் என்பதால் அது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை," என்றார் தங்கபாலு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்