கூடங்குளம் போராட்டம் தீவிரம்: போலீஸார் குவிப்பு

இடிந்தகரை, அக்.13,2011

கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களின் போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதாலும், கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்களை தடுத்து நிறுத்தியதாலும் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

இடிந்தகரையில் இன்று 5-வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள் ஆதரவு தெரிவித்து களத்தில் குவிந்துள்ளனர்.

அணு மின் நிலைய பணிக்கு சென்றவர்களை நேற்று கூடங்குளம் பொதுமக்கள்  திரண்டு நின்று முற்றுகையிட்டு பணிக்கு செல்லவிடாமல் தடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் சமரசம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வேலைக்கு சென்ற ஊழியர்களை பொதுமக்கள் இன்றும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணு விஜய்நகரில் இருந்து, கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்கள் பேருந்துகளில் இன்று காலை வேலைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தபோது, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால், அங்கு போலீஸார் கண்ணீர்புகை குண்டுகளுடன் குவிக்கப்பட்டனர். இதனால் 4 மணி நேரத்துக்கும் மேலாக பதற்றம் நீடித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!