சமூக வலைத்தளத்தை கவனமுடன் பயன்படுத்த சொல்கிறார் மு.க.ஸ்டாலின்! | Use social networks carefully says M.K.Stalin

வெளியிடப்பட்ட நேரம்: 08:51 (25/03/2015)

கடைசி தொடர்பு:14:19 (25/03/2015)

சமூக வலைத்தளத்தை கவனமுடன் பயன்படுத்த சொல்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சமூக வலைத்தளத்தை கவனமுடன் பயன்படுத்துங்கள் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 ஏ-வை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள இன்றைய தினம் (நேற்று) இந்திய ஜனநாயகத்தின் வரலாற்று சிறப்புமிக்க நாள். சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்புவோரை கைது செய்யவும், மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் இந்த பிரிவு அதிகாரம் அளிக்கிறது.

சமூக வலைத்தளங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த பிரிவு கொண்டு வரப்பட்டாலும், காவல்துறையும், அரசுகளும் இதை தவறாகவே பயன்படுத்தி வந்தன. சமூக வலைத்தளத்தில் கருத்து சுதந்திரத்தை முடக்கவும், அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை பறிக்கவுமே இந்த பிரிவு தவறான வழியில் பிரயோகிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிவந்துள்ள இந்த தீர்ப்பின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், கண்ணியமான மாற்று கருத்துக்களை தங்கள் அரசியல் செயல்பாடுகள் மீது தெரிவிக்கப்படும் விமர்சனங்களாக அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவும் பெரும் வாய்ப்பாக அமையும். ஆனாலும், சமூக வலைத்தளத்தை கவனமுடன் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஏனென்றால், நம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள பெரும் வாய்ப்பு வழங்கும் சமூக வலைத்தளங்களில் நாம் சொல்லும் கருத்து எவ்வளவு தாக்கத்தை சமுதாயத்தில் உருவாக்கும் என்று உணருவதும் நம் கடமை என்பதில் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்