வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (09/04/2015)

கடைசி தொடர்பு:13:53 (09/04/2015)

செம்மரம் வெட்ட போன சேலம் தொழிலாளர்கள் 40 பேரை காணவில்லை!

சேலம்: செம்மரம் வெட்ட சென்ற சேலம் மாவட்ட தொழிலாளர்கள் 40 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீருடன் உள்ளனர்.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம், 20 தமிழக தொழிலாளர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் நடந்ததா அல்லது ஆந்திர போலீசார் திட்டமிட்டு படுகொலை செய்தார்களா என்ற சந்தேகம் நீடித்தபடி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து திருப்பதி வனப் பகுதிக்கு செம்மரம் வெட்ட சென்ற மேலும் பல தமிழக தொழிலாளர்களின் கதி என்ன ஆனது என்ற பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் துப்பாக்கியால் சுடத் தொடங்கியபோது அந்த பகுதியில் சுமார் 200 தொழிலாளர்கள் இருந்ததாகவும், அதில் இறந்த 20 பேரை தவிர மற்றவர்கள் அந்த அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடி விட்டதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் ஆந்திர போலீசார் கூறி இருந்தனர்.

அப்படி தப்பிச் சென்ற தமிழக தொழிலாளர்களில் 46 பேர் சேலம்–நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தற்போது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளுர், நீர்முள்ளிக்குட்டை, அறுநூத்துமலை, வெள்ளாளப்பட்டி, கருமந்துறை, தாண்டானூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அருகே உள்ள ஒண்டிக்கடை, காட்டூர் பகுதியை சேர்ந்த 46 பேரையும் செம்மர கடத்தல் ஏஜெண்டு ஒருவர் கடந்த வாரம் திருப்பதி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகத் கூறப்படுகிறது.

அவர்கள், திருப்பதி காட்டுக்குள் செம்மரம் வெட்ட 46 பேரும் நுழைந்தபோது ஆந்திர போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் உயிருக்கு பயந்து 46 பேரும் நாலா புறமும் சிதறி ஓடி உள்ளனர். அப்படி ஓடியவர்களில் 6 பேர் மட்டும் ஆந்திர போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அந்த நேரத்தில் சதீஷ் (30) என்ற வாலிபர் மட்டும் எப்படியோ போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி சொந்த ஊரான சேலம் மாவட்டம் பேளூரை அடுத்த தாண்டனூர் பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் ஆந்திர போலீசாரிடம் இருந்து தப்பி வந்தது பற்றி உறவினர்களிடம் கூறும்போது, ''கடந்த மாதம் 31 ஆம் தேதி ஆந்திராவுக்கு நாங்கள் 46 பேர் செம்மரம் வெட்ட அழைத்து செல்லப்பட்டோம்.

அந்த சமயத்தில், ஆந்திர போலீசார் எங்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் உயிருக்கு பயந்து நாங்கள் ஓடினோம். அப்போது, 5 பேரை மட்டும் ஆந்திர போலீசார் கைது செய்து கடப்பா சிறையில் அடைத்து உள்ளனர். ஆந்திர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியபோது நான் உயிருக்கு பயந்து அங்கிருந்த முள் காட்டில் பதுங்கி இருந்தேன். அதன்பின் ஆந்திர போலீசார் அங்கிருந்து சென்றதும் நான் தப்பி வந்து விட்டேன், மற்றவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்களை ஆந்திர போலீசார் பிடித்து வைத்துள்ளார்களா அல்லது அவர்களும் என்னைப்போல் போலீசாரிடம் இருந்து தப்பி விட்டார்களா என்று தெரியவில்லை" என்று கூறி இருக்கிறார்.

மரம் வெட்ட சென்ற 46 பேரில் சதீஷ் மட்டும் தப்பி வந்திருப்பதால் மற்ற 40 தொழிலாளர்களின் கதி தெரியாமல் அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் உள்ளனர். மேலும், கடப்பா சிறையில் உள்ள 5 தொழிலாளர்களை ஜாமீனில் எடுக்க அவர்களது உறவினர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு, ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்பதால் தமிழக அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்