Published:Updated:

கால்நடை தீவனத் தயாரிப்பு என்ற பேரில் ரேஷன் அரிசி பதுக்கல்; 4.5 டன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார்

ரேஷன்‌ அரிசி

ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள கெங்கராயப்பட்டியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கால்நடை தீவனத் தயாரிப்பு என்ற பேரில் ரேஷன் அரிசி பதுக்கல்; 4.5 டன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார்

ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள கெங்கராயப்பட்டியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Published:Updated:
ரேஷன்‌ அரிசி

விருதுநகர் மாவட்டத்தில் சமீபகாலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் திடீர் வாகனச் சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து வருகின்றனர். இந்த நிலையில், ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள கெங்கராயப்பட்டியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரேஷன் அரிசி
ரேஷன் அரிசி

அதன்பேரில் ஆய்வாளர் ஆல்பின் பிரிட்ஜட் மேரி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், காட்டுப்பகுதியிலிருந்த குடோன் ஒன்றில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 50 கிலோ மூட்டைகளாக மொத்தம் 4.5 டன் எடை ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த குடோன் அதேப் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கோயம்புத்தூர் பகுதியிலிருந்து காரில் வந்த 4 பேர், துரைராஜைச் சந்தித்து கால்நடை தீவனம் தயாரிக்க குடோன் வாடகைக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதற்காக அட்வான்ஸ் தொகையையும் கொடுத்தவர்கள், தீபாவளிக்குப் பிறகு குடோனில் இயந்திரம் அமைத்து கோழி, ஆடு, மாடுகளுக்கு தீவனம் அரைத்துக்கொடுக்கும் தொழிலை தொடங்க உள்ளதாக கூறியுள்ளனர்.

குடோன்
குடோன்

அவர்களின் பேச்சை நம்பி துரைராஜ் குடோன் சாவியை ஒப்படைத்துள்ளார். பின்னர், சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசியை மூட்டை, மூட்டையாக கொண்டுவந்து பதுக்கும் போது, சந்தேகத்தின்பேரில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர்‌ போலீஸூக்கு தகவல் சொல்லியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட வாடகைத்தாரர்கள், துரைராஜிடம் குடோனுக்காக கொடுத்த அட்வான்ஸ் தொகையை மட்டும் அவசர, அவசரமாக பெற்றுக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையிலேயே, போலீஸார் பதுக்கல் ரேஷன்‌அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் உணவுப்பொருள் வாணிபக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.