Published:Updated:

`வேலூரில் கொரோனாவுக்கு 45 வயது நபர் உயிரிழப்பு!’ -தீவிர கண்காணிப்பில் மேலும் 5 பேர்

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை

வேலூரில், `கொரோனா’ தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் `கொரோனா’ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்துவந்த நிலையில் நேற்றிரவு அந்த நபர் உயிரிழந்தார். அரசு நடைமுறைகளின்படி, இவரது உடல் எரியூட்டப்பட உள்ளது. அவர் வசித்துவந்த சைதாப்பேட்டை பகுதி முழுவதுமாக `சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்

உயிரிழந்த நபர் வெளிநாட்டுக்கோ, டெல்லி மாநாட்டுக்கோ சென்று வந்தவரில்லை. பாதிக்கப்பட்டவரிடமிருந்து இவருக்குத் தொற்றியதாக மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை `கொரோனா’ பாதிப்பின் எண்ணிக்கை 6-ஆக இருந்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு காரணமாக 5-ஆகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில், இதுவரை 818 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். டெல்லி தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்டு ஊர் திரும்பிய வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 55 பேரில், 41 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள். பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காத காரணத்தினால், மாவட்டம் முழுவதும் 275 கடைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆதரவற்றோர்
மீட்கப்பட்ட ஆதரவற்றோர்

பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுப்பதற்காகவும், காவல் துறையினருக்கு உதவியாக இருக்கவும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தினர், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 35,112 நபர்களைத் தனிமைப்படுத்துவதற்காக பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் உட்பட 283 கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு