பால்காரர் முதல் வேலைக்காரர் வரை... கவனமாக இருங்கள்!

சென்னை: பால்காரர், பேப்பர்காரர், பழைய பொருள் விற்பவர், வேலைக்காரர்கள் என்று நிறைய பேரை நாம் சந்திக்கிறோம். எல்லோரிடமும் கவனமாக இருந்து கொள்ளவேண்டும் என்று சென்னை நீலாங்கரையில் நடந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சங்கர் பேசினார்.

நீலாங்கரையில் உள்ள பாரதியார் நகர் பொதுமக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் பாரதியார் நகர் மக்களுக்கு குற்றங்களைத் தடுப்பது, விழிப்போடு இருப்பது குறித்து காவல்துறையினர் தகவல்களை வழங்கும் வகையில் காவல்துறை- பொதுமக்கள் சந்திப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உதவி ஆணையர் சங்கர் பேசுகையில், "ஒவ்வொருவருக்கும் சுய பாதுகாப்பு முக்கியம். ஆபரணங்களை அணிந்து கொண்டு தனியாகச் செல்லக்கூடாது. புதிதாக யாராவது வந்தால் அவர்களை நன்கு விசாரிக்க வேண்டும். உறவினர் பெயரைச் சொல்லி வந்தாலும் அறிமுகமானவராக இருந்தால் மட்டும்தான் அனுமதிக்க வேண்டும். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி பொதுமக்கள் ஒவ்வொருவரும் சீருடை அணியாத காவலர்தான். அதனால் ஏதாவது தவறாகக் கண்ணில் பட்டால் விசாரிக்கலாம். அல்லது அருகிலுள்ள காவல்நிலையத்துக்கோ அல்லது 100க்கோ தகவல்களைத் தெரிவிக்கலாம்.

குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்புத்தான் முக்கியம். பால்காரர், பேப்பர்காரர், பழைய பொருள் விற்பவர், வேலைக்காரர்கள் என்று நிறைய பேரை நாம் சந்திக்கிறோம். எல்லோரிடமும் கவனமாக இருந்து கொள்ளவேண்டும். நமது வீட்டில் வாடகைக்கு வசிப்பவர்களைப் பற்றியும், வேலைக்காரர்கள் குறித்தும் புகைப்படத்துடன் கூடிய தகவல்களை நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறோம். இதனை நமது பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும் வகையில் ஸ்பீடு 2 என்னும் திட்டத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் அறிவித்துள்ளார். நீலாங்கரை காவல்நிலையம்தான் அத்திட்டத்தை முதன்முறையாக நடைமுறைப்படுத்தி உள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்கள், பாதுகாப்பு கோரும் முதியோர்கள் நீலாங்கரை காவல்நிலையத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பயன்படுத்தி இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். உங்கள் செல்போனில் இருந்து 2 என்ற எண்ணை மட்டும் அழுத்தினால் எங்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கூறலாம். ஏதேனும் ஆபத்தோ, அல்லது பேசமுடியாத நிலையிலோ இந்த எண்ணை அழுத்தினால் போதும், உங்களிடமிருந்து எந்தவித தகவலும் வராவிடில் உடனடியாக காவல்துறையினர் உங்களை வந்தடைவார்கள். இந்த திட்டத்தை மட்டுமல்லாது, உங்களுக்கான பாதுகாப்புக்காகவும் எங்களை அணுகுங்கள்'' என்றார்.

நீலாங்கரை காவல் ஆய்வாளர் (சட்டம் - ஒழுங்கு) பாஸ்கர், "காவலர்கள் உங்கள் நண்பர்கள்தான். குழந்தைகளிடம் அதைச் சொல்லி வளருங்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றாலோ, அவர்கள் எங்கேயாவது வழிதவறினாலோ காவலர்களை அணுகி உதவி கோரமுடியும். தினமும் குழந்தைகளிடம் பேசுங்கள். பள்ளியில் என்ன நடந்தது என்று கேட்டுக் கொள்ளுங்கள். பெற்றோரைத் தவிர வேறு நபர்கள் அது உறவினராக இருந்தாலும் குழந்தைகள் தங்களைத் தொட அனுமதிக்க இடம் தரக்கூடாது.  அதையும் மீறி தொட்டால் சத்தமிடவேண்டும் என்று சொல்லி  குட் டச், பேட் டச் குறித்து தெளிவுகளை குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டும்.

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் சீருடை அணியாத காவலர்தான். நமது வீட்டில் பாம்பு புகுந்துவிட்டால் முதலில் நாம் அதைத் தாக்க முயற்சிப்போம். முடியாதபோது அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைப்போம். அப்போதும் முடியாவிட்டால் பாம்பாட்டியைக் கொண்டு அதைப் பிடிப்போம். உங்கள் பகுதியில் குற்றம் நடப்பதாகத் தெரிந்தாலோ, சம்பந்தமில்லாதவர்கள் எங்கல் ஏரியாவில் நடமாடினாலோ நீங்கள் முதலில் கேளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். அப்படியும் அந்தத் தவறைத் தடுக்கமுடியாதபோது எங்களுக்குத் தகவல் சொல்லுங்கள் நாங்கள் விரைந்து வந்து உங்களுக்கு உதவுவோம்.

பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் வெளியில் செல்லும்போதும் நான் ஊருக்குப் போகிறேன், எனது வீட்டில் இந்த வேலைக்கு இவர் வருவார் என்று நம்மைப்பற்றிய தகவலை நாமே அடுத்தவருக்குச் சொல்லும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.  நாம் பேசுபவருடனும், நம்மிடம் பேசுபவருடனும் கவனமாக இருக்க வேண்டும். வழிப்பறி திருட்டு போன்றவற்றுக்கு இடம் தரும் வகையில் நாம் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.

பிரச்னைகள் வராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்பட்டு விட்டால் அது எந்தப் பிரச்னையாக இருந்தாலும் காவல்நிலையத்துக்கு வந்தோ, அல்லது 100யைத் தொடர்பு கொண்டோ அந்தப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

"சின்ன சின்ன சோம்பேறித் தனங்கள்தான் பெரிய இழப்பு ஏற்படச் செய்கிறது. பீரோவில் நகைகளை வைக்காதீர்கள். வங்கி லாக்கரில் வைக்கலாம். அல்லது வீட்டுக்குள் வேறு எங்காவது வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் தமிழகத்தில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் பீரோவை உடைத்து கொள்ளைப்போன நகைகள்தான் அதிகம். எனவே பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த வீட்டுக்கார்கள் பற்றித் தெரிந்து வைத்திருப்பதோடு நட்புறவுடனும் இருக்க வேண்டும். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துச் சென்றால் காவலர்கள் உங்கள் இல்லங்களை கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பார்கள்" என்று பாதுகாப்பு டிப்ஸ் வழங்கினார் குற்றப்பிரிவு ஆய்வாளர் தினகரன்.

நிகழ்ச்சியில்  உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவலர்கள் மற்றும் இருநூறுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்கள், காவலர்களைத் தொடர்பு கொள்வதற்காக அவர்களது எண்களுடன் கூடிய ஸ்டிக்கர், ஸ்பீடு 2 திட்ட விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நலவாழ்வு சங்க நிர்வாகிகள் இளங்கோவன், பெருமாள், விநாயகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

- எம்.செய்யது முகம்மது ஆசாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!